- எது கடவுளின் குரல்?
Courtesy: Vishalam Raman
எனக்கு மிகவும் பிடித்த திரு தென்கச்சி சுவாமிநாதனின் கதைகள் மிகச்சிறியதாக இருக்கும், அனால் அதில் அறிவுக் கண்களைத் திறக்கும் சாவி இருக்கும், அதில் நகைச்சுவையும் இருக்கும். தொலைக்காட்சியில் அவர்து கதைகளை மிகவும் ரசித்துக் கேட்பேன்.
அவர் சொன்ன ஒரு கதை:
ஒரு சன்யாசி படகில் போய்க்கொண்டிருந்தார். அவர் உடையும் அவர் முடியும் அநதப்படகில் அமர்ந்திருந்த சில விஷமிகளுக்குப் பிடிக்கவில்லை. அவரைப்பார்த்து கேலி செய்தனர், கிண்டல் செய்தனர், ஆனல் அவர் எல்லாவற்றுக்கும் மௌனமே சாதித்தார்.
படகு மெள்ள மிதக்க, இருள் சூழ ஆரம்பித்தது. மாலை நேரம், அவர் தியானத்தில் அமர்ந்தார். அவரைத் தியானம் செய்ய விடாமல் மேலும் அவர்கள் கிண்டலடித்தனர். அவர் அசையவேயில்லை. கீழேகிடந்த குப்பைகளை அவர் மேல் போட்டனர். அவர் அசையவில்லை. ஒருவன் கீழே கிடந்த செருப்பை அவர் மேல் போட்டான். அவர் முகத்தில் சலனமிலை, கோபமில்லை, தியானத்தில் மூழ்கி இருந்தார். அப்போது ஆகாயத்திலிருந்து ஒரு குரல் ஒலித்தது.
"அன்பு சித்தரே, நீங்கள் விரும்பினால் இந்தப் படகை நான் கவிழ்த்து விடுகிறேன்."
கேலி செய்தவர்கள் இதைக்கேட்டு பயந்தனர். இந்த சாது என்ன சொல்லப் போகிறாரோ என்று மேலும் பயந்தனர்.
"சாது மகராஜ், நாங்கள் தெரியாமல் செய்து விட்டோம், மன்னியுங்கள்." என்று காலில் விழுந்தனர்.
சாது மெள்ளக் கண்களைத் திறந்தார், "கவலைப்படாதீர்கள்" என்றபடி, தன் கைகளை ஆகாயத்தை நோக்கித்தூக்கி, "அன்பான கடவுளே! நீங்கள் சாத்தான் மொழியில் ஏன் பேசுகிறீர்கள்? நீங்கள் கவிழ்து விளையாட வேண்டும் என்றால் இந்தப் படகைக் கவிழ்க்க வேண்டாம். இவர்களது புத்தியைப் புரட்டித் திருப்புங்கள். புத்தியைத் திருப்பாமல் படகைத் திருப்புவதால் என்ன பயன்?"
உடனே ஆகாயத்திலிருது அசரீரி கேட்டது, "நீ உண்மையான பக்தன், உண்மையைச் சரியாகப் புரிந்து கொண்டாய். சிறிது நேரத்திற்கு முன்னால் ஒலித்தது என் குரல் அல்ல, அது சாத்தானின் குரல். எவன் ஒருவன் சாத்தானின் குரலைப் புரிந்து கொள்கிறானோ, அவனால்தான் என் குரலையும் புரிந்து கொள்ள முடியும்."
ஆம் இதை எப்படிக் கண்டுபிடிப்பது?
யார் என்ன பேசினாலும், அது பிறருக்கு நன்மை தருவதாக இருந்தால் அது கடவுளின் குரல், பிறருக்குத் தீமை விளைவிக்கும் சொல் சாத்தானுடையது.
Designed and maintained by AKR Consultants

