- கருணை வடிவம் சாயி
- திருமதி விசாலம்
நவம்பர் 23ந் தேதி பகவான் ஸ்ரீசத்ய சாயி அவர்களின் பிறந்த நாள்.
ஷீரடி சாயிபாபா இந்த உலகைத் துறந்த போது, "நான் மீண்டும் எட்டு ஆண்டுகளில் திரும்ப வருவேன்." என்று பக்தர்களுக்கு வாக்குக் கொடுத்தார், அவரும் வாக்கு கொடுத்தபடி வந்தார், ஆனால் சீரடியில் இல்லை. அவர் வந்தது புட்டப்பர்த்தியில் தான். புட்டப்பர்த்தி முன்பு ஒரு வரட்டுக் கிராமமாகத்தான் இருந்தது. எங்குப் பார்த்தலும் பாம்புப் புற்றுகள்.
அவரைப்பெற்ற அன்னை ஈச்வரம்மா மிகுந்த பாக்கியசாலி. ஈசுவரம்மா கிணற்றடியில் நீர் எடுக்கும் போது ஆகாயத்திலிருந்து ஒரு நீலப்பந்து போல் ஒரு ஒளி மெள்ளக் கீழே இறங்கி வருவதைப் பார்த்தார். அதே நேரத்தில் அந்த ஒளி ஈசுவரம்மா வயிற்றில் புகுந்தது. அவர் மயக்கமடைந்தார். 1926ம் வருடம் நவம்பர் மாதம் 23ந்தேதி காலை ஆதவன் தன் செங்கதிர்களைப் பரப்பி சாயிராமை வரவேற்றான். ஆம், திருவாதிரை நட்சத்திரத்தில் காலை சூரியோதயத்தில் பாபா அவர்கள் அவதரித்தார். அவர் பிறந்தவுடனே ஈசுவரம்மா மயக்க நிலையில் இருக்க, பாம்பணையின் மேல் பாபா சயனித்திருந்ததைச் சிலர் கண்டனர்.
அவரது 14வது வயதில் பள்ளியிலிருந்து வீட்டை அடந்ததும் ஒரு அறிவிப்பைத் தெரிவித்தார், "நான் இனி உங்களுக்கு சொந்தமில்லை, இநத மாயத்தோற்றம் மறைந்து விட்டது. நான் தான் சாயி, மானிட சேவைக்காகவே வந்திருக்கிறேன்."
இதைக் கேட்ட தாய் கண்ணீர் வடித்தார். உற்றார், உறவினர் கண் கலங்கினர்.
தாய் பேசினாள், "சதயா, என் உயிரே, உன்னை விட்டு நான் எப்படி இருப்பேன்? எனக்கு ஒரு வரமாவது கொடு, நீ உலகத்திற்கு மகனாகி விட்டாய், சேவை செய்வது உன் தர்மம், ஆனால் உன்னை நான் பார்க்குமபடி இந்தப் புட்டப் பர்த்தியிலாவது தங்க வேண்டும் செய்வாயா?"
சாயி விடையளித்தார், "அன்னையே, நான் தேர்ந்த்டுத்த க்ஷேத்ரமே புட்டார்த்திதான். இங்கு இருந்தபடியே சேவை நட்க்கும்"
அன்று சொன்னபடியே, பர்த்தி கிராமம் இன்று சுவர்க்கபூமியாக இருக்கிறது. ஆரம்பப் பள்ளியிலிருந்து பெரிய யுனிவெர்சிடி வரை பலப்பிரிவுகளுடன் நடத்தப்படுகின்றன, பெரிய ஆஸ்பத்திரியும் இலவசமாக நடத்தபடுகின்றது. ஆன்மீகம் தழைத்து ஓங்குகிறது. அந்த இடத்தில் லட்சம் பேர் வந்தாலும் ஒழுங்குடன் கூட்டம் நடக்கப்பெற்று மனதில் ஆனந்தத்துடனும் திருப்தியுடனும் வருவதைப் பார்க்க முடிகிறது. பல வெளிநாடுகளிலிருந்து வரும் பெண்மணிகள் புடவையுடன், நெற்றியில் பொட்டுடன், தலையில் பூவுடன் வரும் அழகைச் சொல்ல முடியாது. அவர்கள் மிக அழகாக வேதம் சொல்கிறார்கள். இத்தனைக்கூட்டம் இருந்தும் ஊசி விழும் சத்தம் கூடக் கேட்பதில்லை, அத்தனை நிசப்தம்.
அங்குப்போனால் மனமெல்லாம் சாயிதான் நிறைந்திருக்கிறார், வேறு சிந்தனையே வருவதில்லை. உலகமே மாயை என்பது அங்குப்போனால் நன்கு புரிகிறது, ஆனால் கடமை என்று ஒன்று உந்த, வீடு திரும்பி வர வேண்டி இருக்கிறது. சாயி பாபா கடமைகள் செய்வதற்குத்தான் முதல் இடம் தருகிறார்.
வளரும்....
Designed and maintained by AKR Consultants
