Bookmark and Share 


Healthcare Tips
Parents Home
Couples Suit
Spiritual Path
Student's Corner
Youth Resort
Management
Lighter Moments
Entertainment
Serious Side
World Tour
Internet Links
Snippets

Tamil Software
அழகி மென்பொருள்
  
Tamil-English bilingual webmagazine dedicated to education of the masses through E-books, articles, worldwide informations, Slideshows,
Presentations on various subjects, photographs and images, moral and objective oriented stories and Lectures including audio and video

Let us know more about kalakad

Courtesy: Chandrasekaran, Kalakad


KUMBABISHEKAM PHOTOGRAPHS

களக்காடு சிவன் கோவிலுள்ள நெற்களஞ்சியம்

திருநெல்வேலி மாவட்டத்தில் நான்குநேரி வட்டத்தில் மேற்குத் தொடர்ச்சி மலை அடிவாரத்தில் களக்காடு அமைந்துள்ளது. இவ்வூரின் வடக்குப் பகுதியில் அமைந்துள்ள கோமதி அம்பாள் சமேத சத்யவாகீஸ்வரர் திருக்கோவிலின் தென்மேற்கு மூலையில் 20 அடி விட்டமும் 22 அடி உயரமும் உள்ள ஓர் கட்டிடம் பழுதடைந்து காணப்படுகிறது. இது அரசர்கள் ஆண்ட காலதில் தானியங்களைச் சேமித்து வைக்கக் கட்டப்பட்டதாகக் கூறப்படுகிறது.

இக்கோவில் வழிபாட்டுத்தலமாக மட்டுமல்லாமல் கோட்டையாகவும் பயன் படுத்தப்பட்டிருக்கலாம் என்பதற்கு அத்தாட்சியாக மதில் சுவரில் வீரர்கள் நின்று போரிட வாய்ப்பாகக் கற்கள் பதிக்கப்பட்டிருக்கின்றன. இக்கோவில் கல்வெட்டுகளில் பல மன்னர்கள் கோயிலுக்காக நிலங்களை விட்டுக்கொடுத்து அவற்றிலிருந்து வரும் வருவாயில் செய்ய வேண்டிய செலவுகள் பற்றிக் குறிப்புகள் காணப்படுகின்றன. (இக்கல்வெட்டுக்களின் படி இத்துடன் இணைக்கப் பட்டிருக்கிறது) போர்க்காலங்களிலும் மற்ற உற்பத்தி குறைந்த காலங்களிலும் இக்களஞ்சியத்தில் சேமித்து வைக்கப்பட்டிருந்த தானியங்கள் பயன்பட்டிருக்கலாம். இவ்வளவு பெரிய நெற்களஞ்சியம் களக்காட்டு ஊரின் வளத்திற்கு எடுத்துக்காட்டாக விளங்குகிறது.

முனைவர் ஆ. தசரதனால் எழுதப்பட்டு "தமிழ் ஓலைச்சுவடிகள் பாதுகாப்பு மையம், சென்னை அவர்களால் வெளியிடப்பட்ட பத்மநாபசுவாமி கதைப்பாடல்கள்" என்ற ஆராய்ச்சி நூலில் பக்கம் 130-132ல் பின் வருமாறு எழுதப்பட்டிருக்கிறது.

களந்தை என்பது களக்காடு எனத் தற்போது வழங்கப்படுகிறது. களம் என்றதற்கு ஏற்ப இங்குப் பாண்டியரின் படைவீடு இருந்தது. காடு என்பதற்கு ஏற்ப இந்த ஊர் மலை அடிவார நகராக உள்ளது. வரலாற்றுக் காலத்தில் கரவந்தாபுரம் என்றும் அழைக்கப்பட்டது. பாண்டியன் நெருஞ்சடையானின் கரவந்தாபுரம் வேள்விக்குடி செப்பேடுகள் இங்கிருந்து வெளியிடப்பட்டன. பொதியமலை அடிவாரத்திலிருந்த ஆய்குல வேளை வெல்ல இங்கே பாண்டியன் படைவீடு அமைத்திருந்தான். அருவியூக் கோட்டை என்பதை அப்போது அழித்தான். ஆயை வென்ற பின் இங்கே அரண்மனை ஒன்றை அமைத்தான். இவ்வாறு இச் செப்பேடுகளிலிருந்து தெரிகிறது. இப்பகுததியிலிருந்து வைத்தியருள மாறன்காரி என்பவனே அரசன் பொருட்டு இச்செப்பேட்டை வெளியிட்டான்.

பாண்டியருக்குப் பின் சோழரிடம் இப்பகுதி வந்தது. இங்கிருந்து சோழகுலவல்லியை சேரநாட்டு அரசன் ஒருவன் மணந்து இதைத் தலைநகராக்கி ஆண்டான் எனக் கூறப்படுவதற்கு எந்த ஆதாரமும் இல்லை. இப்பகுதி அப்போது "வானவன் நாடு" எனப் பெயர் பெற்றது. அதன் தலைநகர் சோழகுலவல்லிபுரம் என அழைக்கப்பட்டது. விசயநகரத்து வேந்தர்களுக்கு உரிய பகுதியாக அது இருந்தது. அச்சுதராயர் இங்கிருந்த ஆலயத்தில் பல திருப்பணிகளைச் செய்தார்.

"களக்கோட்டை" என்றே அப்போது இப்பகுதி அழைக்கப்பட்டதாக மன்னார்கோவில் கல்வெட்டு கூறுகிறது. இங்குள்ள சிவன் கோவிலில் "சீவல்லி மண்டபம்" என்ற பெயரில் சீவலமாற பாண்டியன் கட்டிய அழகான மண்டபம் ஒன்று உள்ளது. இது விசயநகரக் காலத்தியது. அச்சுதராயர் ஆதரவினால் சீவலமாற பாண்டியன் இம்மண்டபத்தைக் கட்டினான். கி.பி.16ம் நூற்றாண்டின் முதல் பகுதியில் அமையப் பெற்ற கல்வெட்டுகளிலிருத்து களக்காட்டு நகரில் சத்யவாகீஸ்வரர் ஆலயம் உதய மார்த்தாண்ட வர்மாவால் கட்டப்பட்டதாகத் தெரிகிறது. பூர்வீக சேர அரசர்கள் இத்திருக்கோவிலில் திருப்பணிகள் செய்திருந்தனர். அதனால் சேரமான் பெருமாள், சுந்தரர், திருமால் ஆகியோருக்கு இங்கே திருவுருவங்கள் உள்ளன.

அச்சுதராயர் மற்றும் சீவலமாறன் தொடர்புள்ள சிறப்புமிக்க இத் திருத்தலத்திற்கே தம்பிரான் வந்தார். இயற்கை எழில் பரவும் சோலைகள் சூழ்ந்த வழியாக அவர் வந்தார். இச்சோலைகள் குடமாடி மலை அடிவாரத்தில் அமைந்துள்ளன. இந்தப் பகுதியை உள்ளடக்கியிருந்த வானவன் நாடு தம்பிரான் வந்த கால கட்டத்தில் மிகச் சிறந்த நாடாக இருந்ததால் அவரால் போற்றப்பட்டது. வானவன் என்பது சேரனுக்குரிய பட்டப்பெயர்.

"ஊரு பல ஆறு விட்டு ஊக்க முள்ள திருமாலும்
சங்கை யுள்ள கேந்திரனும் சல்லிப்பூதம் தன்னுடனே
குங்குமம் சிறந்த பொய்கை குளிர்ந்த மரச்சோலை கண்டு
செங்கை நெடுமா லாவரும் திருந்திப் பொருந்தி மனம்
குடமாடி யென்னு மலை கொற்றவாளர் கண்டருளி
அடைவாகவே யிருந்த அந்த மலைவா ரத்திலே
பூங்கவும் தேன்கமழும் புன்னை மரச்சோ லைகளும்
பாங்கான மங்கையர்கள் பாவை யர்கள் குலவையிட
நீங்காத வாவிகளும் நித்தலரும் பூங்காவும்
கொத்தலரும் செண்பகமும் குளிர் தாமரை வாவிகளும்
இத்தை யெல்லாம் கண்டருளி யின்னாடு நன்னா டெனவே

இவற்றைக் கண்ட தம்பிரான் களந்தைப் பகுதியில் இருக்கும் கறைக்கண்டரையும் கலியுக மெய்யரையும் கண்டதாகப் பாடப் பெற்றுள்ளது.

"களந்தை கறுதரையும் கலியுகத்தில் மெய்யரையும்
வளர்ந்த திருமேனி மாயவரும் மறையவனும்
செங்கோலின் முறை நடக்கும் திருக்களந்தை தன்னைவிட்டு
நங்கைபல மாது புயன் நாயனார் சேரியில் வந்தார்"

களந்தைப்பகுதியில் கண்டறுங்கறுத்தவர் இருந்த மண்டபம், சந்நிதி மற்றும் செங்கோலின் சிறப்பு ஆகியவற்றை தம்பிரான் கண்டார். அவர் மேலும் அப்பகுதியிலிருந்த ஆட்சி சிறந்த ஆட்சியாகவும் அமைந்திருந்ததையும் கண்டார்.இதிலிருந்து களக்காடு மிகவும் செழுமை பொருந்திய இடமாக இருந்தது என்பதை அறியலாம்.

பல களம் கண்ட காடு களக்காடு

(கீழ்க்கண்ட தகவல்கள் முனைவர் ந.இராசையாவால் எழுதப்பட்டு, பேராசிரியர் காவ்யா சண்முக சுந்தரத்தால் தொகுக்கப்பட்டு, காவ்யா பதிப்பகம், சென்னை-24 அவர்களால் 2007ம் ஆண்டு வெளியிடப்பட்ட நூலிலிருந்து எடுக்கப்பட்டது)

1) பூலித்தேவன் கும்பினியாரை எதிர்த்து நடத்திய போர்கள் (பக் 67)

1755ம் ஆண்டு சூலையில், ஆற்காட்டு நவாபின் சகோதரனான மாபூசுகான் பெரும்படையுடன் வந்து களக்காட்டுக் கோட்டையைக் கைப்பற்றினான். இதனை அறிந்த பூலித்தேவன், திருவிதாங்கூர் படைகளையும், மதுரையில் இருந்து வந்த முடோமியா என்னும் பட்டாணியனின் படைகளையும் சேர்த்துக் கொண்டு மாபூசுகானுடன் போரிட்டு களக்காட்டுக் கோட்டையைக் கைப்பற்றினான் பூலித்தேவன். (Country correspondence, 1755,Letter 132, P 53)

இப்போரானது, ஹெரான் பூலித்தேவனிடம் தோல்வியடைந்து சென்ற இரண்டு மாதத்திற்குள் நடந்ததாகும். இக் களக்காடு கோட்டை, திருவனந்தபுரம் பழைய அரண்மனை இருக்கும் பத்மநாபபுரத்தின் அருகாண்மையில் உள்ளது. களக்காட்டுப் போரிலிருந்து தொடர்ந்து கும்பினியாரை எதிர்த்துப் பலபோர்களைப் பூலித்தேவன் நடத்தியுள்ளான். அவற்றைப் பற்றி தெரிந்து கொள்வது இன்றியமையாததாகும்.

2) மாவீரன் பூலித்தேவன் கூட்டணி (பக் 145)

கும்பினியாரும் ஆற்காட்டு நவாப்பும் சேர்ந்து கெடுபிடி வசூலில் இறங்கினர். இதை எதிர்க்கத் தமிழ்ப் பாளையக்காரர்கள் ஓரணியில் சேர்ந்து, புரட்சித் தளங்களைப் பலம் பொருந்தியதாக அமைக்கவும் திட்டம் தீட்டினான் பூலித்தேவன். ஏற்கனவேயுள்ள நெற்கட்டான் செவ்வல் கோட்டையைப் பலப்படுத்தினான். கெரனால் பலமுறை பீரங்கியைக் கொண்டு தாக்கியும் ஒன்றும் செய்ய முடியாமல் திருப்பிப் போகச் செய்தது நெற்கட்டான் செவ்வல் கோட்டை. பனையூரில் ஓர் கோட்டையைக் கட்டினான். இக்கோட்டை சிறிய அளவில் இருந்தது. வாசுதேவநல்லூர் கோட்டையை வலுவானதாகச் செய்தான். அண்டைய பாளையமான கொல்லங்கொண்டான், ஊத்துமலை ஆகிய பாளையங்களின் கோட்டையைக் கட்டும்படி செய்தான். களக்காட்டிலும் ஒரு கோட்டையைக் கட்டினான். இந்தக் கோட்டைகளுக்குப் பாண்டியர்களின் பெயர்களைச் சூட்டினான். வீரபாண்டியன் கோட்டை திருவனந்தபுரம் எல்லைப்பகுதியின் அருகிலுள்ளது களக்காடு கோட்டையாகும். இவ்வூரைக் கைக்கொள்ளும் பொருட்டு சேர, பாண்டியர்களிடையே அடிக்கடி அங்கு போர் நடந்ததால் களக்காடு எனப் பெயர் ஏற்பட்டது. களம் + காடு = களக்காடு என்று பெயர் ஏற்பட்டது. இதன் பழைய பெயர் சோழகுல வல்லிபுரம் என்பதாகும். இதனை காமன், உதயன், சுந்தரன், கோதை ஆகிய சேர அரசர்கள் கொல்லம் ஆண்டு 420 முதல் (1245) ஆண்டு வந்தனர். மலைச்சாரலின் கண் அமைந்துள்ளதால் எதிரிகளிடமிருந்து பாதுகாத்துக் கொள்ள இயற்கைச் சாதனங்களும் இருந்தன. இங்கு மாவீரன் பூலித்தேவன் வீரபாண்டியன் கோட்டை என்னும் பெயரில் ஒரு கோட்டையக் கட்டினான். இக்கோட்டையைப் பற்றி துர்க்காதாஸ்சாமி தனது நூலில் குறிப்பிட்டுள்ளார். (ஸ்வாம,¢ துர்க்காதாஸ், எஸ்.கே, தமிழ்மறவன் பூலித்தேவன், தேனருவி வெளியீடு, தி.நகர், சென்னை - 17. 1958 பக் 41)

(பக் 149)

இந்நிலையில் மாவீரன் புலித்தேவனின் கூட்டணியை வலுப்படுத்த, களக்காட்டுக் பகுதியை திருவனந்தபுரம் மன்னன் மார்த்தாண்ட வர்மனுக்கு விற்றுவிட்டான் முடோமியா. ஆர்க்காட்டு நவாபின் திருச்சி பிரதிநிதியாகவும், அதிகாரியாகவும் இருந்ததால் களக்காட்டுப் பகுதியை விற்கும் அதிகாரம் முடோமியாவிடம் இருந்தது. (பக் 151) களக்காட்டுக் கோட்டையை விலைக்கு வாங்கிய மார்த்தாண்ட வர்மன் 2000 போர் வீரர்களைக் கொண்ட படையை அங்கு நிறுத்தி வைத்திருந்தான். 1755ல் மாபூசுகான் திடீரென்று தாக்கி களக்காட்டுக் கோட்டையைக் கைப்பற்றினான். பின்னர் மாபூசுக்கான் மதுரைக்குச் சென்று விட்டதை அறிந்த முடோமியாவும், மாவீரன் பூலித்தேவனும், திருவாங்கூர் மார்த்தாண்டனும் சேர்ந்து களக்காட்டுக் கோட்டையை மீண்டும் கைப்பற்றினர். இதனை அறிந்த மாபூசுகான் 600 குதிரைப்படைகளுடனும், ஆயிரம் சிப்பாய்களுடனும், திருநெல்வேலியிலிருந்த ஏனைய படைகளுடன் களக்காட்டைத் தாக்கினான்.

மாவீரன் பூலித்தேவனின் புரட்சிப் படையும், திருவாங்கூர் மார்த்தாண்டனின் படைகளும் சேர்ந்து மாபூசுகான் படையை எதிர்த்தன. மாவீரன் பூலித்தேவனின் வீரத்திற்கு முன்னால் மாபூசுகானின் படைகள் எதிர்த்து நிற்க முடியாமல் தங்கள் ஆயுதங்களையும் போட்டு விட்டு ஓடினர். மாவீரன் பூலித்தேவன் வெற்றி பெற்றான். இதைப்போன்ற பல செய்திகள் இந்நூலில் தொகுக்கப்பட்டுள்ளன.

களக்காட்டுக் கோவிலில் அமைந்திருக்கும் சுரங்கப்பாதை.

களக்காட்டுச் சிவன் கோவில் கோட்டையாகப் பயன் படுத்தப்பட்டிருக்கலாம் என்பதற்கு அத்தாட்சியாக, சிவன் கோவிலில் இருந்து மேற்கே வீரமார்த்தாண்ட விநாயகர் கோயிலுக்கும், கிழக்கே நினைத்ததை முடித்த விநாயகர் கோயிலுக்கும் இடையே சுரங்கப்பாதைகள் இருந்தன் என்பதற்கு அத்தாட்சியாக சில அடையாளங்கள் இக்கோயில்களில் காணப்படுகின்றன. இங்கிருந்து பத்மநாபபுரம் அரண்மனைக்கும், சேரன்மகாதேவி சிவன்கோவிலுக்கும் இடையே சுரங்கப்பாதைகள் இருந்ததாக கூறப்படுகிறது. ஆனால் அதற்கான அடையாளங்கள் காணப்படவில்லை.

மேற்கண்டவற்றிலிருந்து, சாதாரண காலங்களிலும், உணவு தட்டுப்பட்டுக்காலங்களில் வழங்குவதற்காகவும், போர்க்காலங்களிலும் இந்த தானிய சேமிப்புக் கட்டிடம் பயன் பட்டிருக்கலாம் என உறுதியாகத் தெரிகிறது.

Tell A Friend!
Type In Your Name:
Type In Your Email:
Your Friend's Email:
Your Comments:

Receive copy:

PLEASE GIVE YOUR FEEDBACK


*Name:  

*E-mail:  

*Comments:


*Enter number in the text box below


Designed and maintained by AKR Consultants