Bookmark and Share 


Healthcare Tips
Parents Home
Couples Suit
Spiritual Path
Student's Corner
Youth Resort
Management
Lighter Moments
Entertainment
Serious Side
World Tour
Internet Links
Snippets

Tamil Software
அழகி மென்பொருள்
  
Tamil-English bilingual webmagazine dedicated to education of the masses through E-books, articles, worldwide informations, Slideshows,
Presentations on various subjects, photographs and images, moral and objective oriented stories and Lectures including audio and video

'செல்லப்பிள்ளையை வணங்குவோமா: இன்று தைப்பூசம்' (17-01-2014)

Courtesy: KTR, CHENNAI

தைப்பூசம் என்றால் என்ன?

தைப்பூசத்திருவிழா, பழநியில் சிறப்பாக கொண்டாடப்படுகிறது.

சிவன் நடராஜராக நடனமாடிய நாள் மார்கழி திருவாதிரை. சிவனும், அம்பிகையும் இணைந்தாடிய நாள் தைப்பூசம். இவ்வகையில், தைப்பூசம் சிவசக்திக்குரிய நாளாகிறது.

இதனால்தான் மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயில், திருவிடைமருதூர், திருப்புடைமருதூர் சிவாலயங்களில் இந்த விழா விசேஷமாக நடக்கிறது.

ஆனால், பழநியில் மட்டும் முருகன் கோயிலில் இவ்விழா பிரசித்தமாகி விட்டது. இதற்கு காரணம் என்ன தெரியுமா!

பழநிமலை அடிவாரத்தில் இருந்து 3 கி.மீ. தூரத்தில் பெரியநாயகி அம்பாள் சமேத கைலாசநாதர் கோயில் உள்ளது. இங்கு சிவன், அம்பாள் சந்நிதியின் நடுவில் முருகன் சந்நிதி உள்ளது. பிரதான வாசலும், கொடிமரமும் முருகன் எதிரில் உள்ளதால் கோயிலுக்கு வருபவர்கள் முதலில் முருகனை வழிபட்டனர். காலப்போக்கில், முருகன் சந்நிதி எதிரிலுள்ள கொடிமரத்தில் தைப்பூசத் திருநாள் கொடி ஏற்றப்பட்டது. தகப்பனை வழிபட வந்தவர்கள், தகப்பன் சுவாமியான முருகனுக்கு முக்கியத்துவம் தந்து வழிபட்டனர். காலப்போக்கில், தைப்பூசத்திருநாள் முருகனுக்குரியதாக மாறி விட்டது. தற்போதும் தைப்பூசவிழா, பெரியநாயகி அம்மன் கோயிலிலேயே நடக்கிறது. இங்குள்ள உற்சவர் முத்துக்குமாரசுவாமி தினமும் எழுந்தருள்கிறார்.ஆனாலும், பக்தர்கள் மலை மேல் வீற்றிருக்கும் தண்டாயுதபாணி மீது கொண்ட பக்தியால் அங்கே குவிகின்றனர். ((நன்றி: தினமலர்)

அற்புதங்கள் நிறைந்த தைப்பூசம்

Author: கேசி பகவான்ஜி Jan 16, 2014

ஆண்டாண்டு காலமாய் தை மாதத்தில் வரும் பௌர்ணமியும் பூச நட்சத்திரமும் கூடிய நாளை தைப்பூசத் திருநாளாகக் கொண்டாடி வருகிறோம்.

ஆண்டாண்டு காலமாய் தை மாதத்தில் வரும் பௌர்ணமியும் பூச நட்சத்திரமும் கூடிய நாளை தைப்பூசத் திருநாளாகக் கொண்டாடி வருகிறோம். மற்ற மாதங்களில் வரும் பூச நட்சத்திரங்களைவிட தை மாதத்தில் வரும் பூச நட்சத்திற்கு சிறப்பான "நட்சத்திர அந்தஸ்து' உண்டு. காரணம் பல ஆன்மிக அற்புதங்கள் இந்த நன்னாளில் நிகழ்ந்திருக்கின்றன.

பண்டைக்கால தமிழகத்தில் தைப்பூசத்தன்று புனித நீராடுதல் மிகுந்த பக்தி உணர்வோடு கடைப்பிடிக்கப்பட்டு வந்திருக்கிறது "'பூசம் நாம்

புகுதும் புனல் ஆடவே'' என்று தைப்பூசத் திருநாளன்று நீராடுவது பற்றி அப்பர் பாடுகிறார்.

மயிலையில் தைப்பூச விழா கொண்டாடியது பற்றியும் அப்போது அன்னதானம் செய்தது பற்றியும் ஞானசம்பந்தர் தேவாரத்தில், (சம்பந்தர் தேவாரம், திருமயிலைப் பதிகம், பா.எண். 5)

மைப்பூசு மொண்கண் மடநல்லார் மாமயிலைக்

கைப்பூசு நீற்றான் கபாலீச் சரம மர்ந்தான்

நெய்ப்பூசு மொன்புழுக்க னேரிழையார் கொண்டாடும்

தைப்பூசங் காணாதே போதியோ பூம்பாவாய்'' என்று குறிப்பிடுகின்றார். தைப்பூசத் திருவிழாவைக் கண்ணாறக் கண்டு களித்தல் முக்கியமானது என்று உணர்த்துகிறது இந்தப் பாடல். தைந் நீராடுதல் பூச நட்சத்திரம் கூடிய நன்னாளில் கொண்டாடப்படுகிறது. நட்சத்திரங்களின் தலைவனாக புராணங்களில் சொல்லப்படும் பிரஹஸ்பதி என்னும் தேவ குருவை பூஜிப்பதாகக் கொள்வர். பிரஹஸ்பதி அறிவின் தெய்வமாகக் கருதப்படுபவர். எனவே தைப்பூசத்தன்று புனித நீர் நிலைகளில் நீராடி குருவை வழிபட கல்வி - கேள்வி - ஞானம் ஆகியவற்றில் சிறந்து விளங்கலாம் என்பது நம்பிக்கை. குரு பகவானுக்கும் குருவாக கல்லால மரத்தின் கீழ் உபதேசித்த சிவபெருமானுக்கும், சிவனால் மனங்குளிர உபதேச மந்திரம் உபதேசித்த முருகப் பெருமானுக்கும் இப்பூசநாள் உகந்தது. இம்மாதிரி ஒரு தைப்பூச நாளில்தான் நடராஜப் பெருமான் பதஞ்சலி வியாக்கிரபாதருக்குத் தமது திருக்கூத்தை காட்டியருளினார்.

தைப்பூசத் திருநாள் மிகச் சிறப்பாகக் கொண்டாடப்பட்டு வந்தது என்பது பல கல்வெட்டுகளால் நமக்குப் புலனாகிறது. திருவிடைமருதூர் ஜோதி மகாலிங்கசுவாமி கோயிலில் தைப்பூசம் சிறப்பாக நடந்ததை கல்வெட்டுகள் மூலம் அறியலாம்.

தஞ்சை மாவட்டம், திருவேடிக்குடியிலுள்ள வேதபுரீசுவரர் கோயில், திருவடி பஞ்சநதிசுவரன் கோயில் ஆகியவற்றிலும் தைப்பூசம் சிறப்பாக நடைபெற்றதையும், அதற்கு நிலங்கள் தானமாக அளிக்கப்பட்ட செய்தியையும் கல்வெட்டுகள் மூலம் அறிய முடிகிறது.

தைப்பூச நாளன்று நீராடி இறைவனை வழிபட பேய், ஆவி போன்றவற்றால் பாதிக்கப்பட்டவர்கள் நலம் பெறுவார்கள் என்பது நம்பிக்கை. இதுபற்றி வழங்கப்படும் புராணக் கதை திருவிடைமருதூர் அருகில் பிரபலம்.

சோழநாட்டை அம்சத்வசன் என்ற மன்னன் ஆண்டு வந்தான். அவனுக்கு தீர்த்த யாத்திரை செல்ல வேண்டும் என்பது நீண்ட நாள் ஆசை. ஆனால் ராஜ்ய பாரக் கடமைகளால் அது நிறைவேறவில்லை. எனவே தனக்கு பதிலாய் வேதம் அறிந்த ஓர் அந்தணருக்கு பெரும் பொருள் உதவி செய்து தீர்த்த யாத்திரைக்கு அனுப்பி வைத்தான். அவர் திரும்பி வரும் வரை அவரது குடும்பத்துக்குத் தேவையான பொருளுதவியையும் அளித்து வந்தான்.

பல நாள்கள் கழிந்தன. மாறுவேடம் பூண்டு நகரைச் சுற்றிப் பார்க்கக் கிளம்பிய மன்னன் அப்படியே அந்த அந்தணரது குடும்பம் எப்படி இருக்கிறது என்றும் பார்க்கலாம் என்று போய்ப் பார்த்தான். வீட்டில் யாரோ ஒருவன் இருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்த அரசன், கோபாவேசமாக வீட்டிற்குள் புகுந்து அந்த நபரைக் குத்திக் கொன்றான். அதன்பிறகே தனக்காக தீர்த்த யாத்திரை சென்ற அந்தணர்தான் என்பதை அறிந்து திடுக்கிட்டான். அந்தப் பாவம் தன்னை பீடிக்குமே என்று அஞ்சினான். அதற்கு ஏற்றாற்போல் கொலையுண்ட அந்தணரின் ஆவி அரசனை இரவிலும் பகலிலும் துன்புறுத்தியது. அந்தப் பாவத்தைப் போக்க தீர்த்த யாத்திரையாக பல தலங்களுக்கும் சென்றான். இறுதியாக திருவிடைமருதூர் வந்தான். கோயிலுக்குள் உள்ள தீர்த்தத்தில் நீராடினான். என்ன ஆச்சரியம்..! அந்தணர் ஆவி அவனை விட்டு நீங்கியது. அவ்வாறு அந்த ஆவி நீங்கிய நாள் தைப்பூசத் திருநாள். இதையறிந்த மன்னன் அக்கோயிலில் தைப்பூசத் திருவிழா ஆண்டுதோறும் நடைபெற பெரும் நிதியுதவி செய்தான்.இதேபோல் இன்னொரு கதையும் பிரபலம்.

மதுரையை ஆண்ட வரகுண பாண்டியன் குதிரையில் வேகமாக வந்துகொண்டிருந்தான். அப்போது வயதான பிராணமர் ஒருவர் அந்த நேரம் தெருவைக் கடக்க முயல, குதிரையில் அடிபட்டு உயிரிழந்தார். அந்தப் பாவத்திலிருந்தும் ஆவியின் பிடியிலிருந்தும் விடுபட நினைத்த மன்னன் பல தலங்களுக்கும் சென்று வழிபட்டான். இறுதியில் திருவிடைமருதூர் சென்று வழிபட்டால் விடிமோட்சம் பிறக்கும் என்று கூறினர். ஆனால் பாண்டியனுக்கு சோழநாட்டுக் கோயிலுக்குச் சென்று வழிபட மனம் வரவில்லை. எனவே சுந்தரேஸ்வரரை வேண்டினான். ""இன்னும் கொஞ்ச நாளில் சோழன் பாண்டிய நாட்டின் மீது படையெடுத்து வருவான்; உன்னிடம் மோதுவான்; ஆனால் தோற்றுவிடுவான். திரும்பி ஓடுவான். நீ அவனைத் துரத்திக்கொண்டு சோழ நாட்டிற்குச் செல். அப்போது திருவிடைமருதூர் கோயிலுக்கும் சென்று வழிபடலாம்'' என்றார் சுந்தரேஸ்வரர். இறைவன் சொன்னபடியே எல்லாம் நடந்தன. சோழனைத் துரத்திய பாண்டியன் திருவிடைமருதூர் கோயிலுக்குச் சென்றான். என்ன ஆச்சரியம்! அவன் கோயிலுக்குள் நுழைந்து வழிபட்டதும் அவனை பிடித்திருந்த ஆவி விலகியது. இந்த அற்புதம் நடந்ததும் தைப்பூசத்தன்றுதான்

ஒரு தைப்பூசத் திருநாளில்தான் திருஞானசம்பந்தர் எலும்பிலிருந்து பூம்பாவையை எழுப்பினார். இன்றும் தைப்பூசத்தன்று சென்னை மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயிலில் இந்த வைபவம் தைப்பூசத்தன்று திருவிழாவாகக் கொண்டாடப்படுகிறது.

சூரபத்மனை அழிக்க முருகப் பெருமானுக்கு அன்னை பார்வதி சக்திவேல் கொடுத்து ஆசிர்வதித்ததும் ஒரு தைப்பூச நாளில்தான்.

தைப்பூச நாளன்று திருநெல்வேலி நெல்லையப்பர் கோயிலில் கூடும் பக்தர்கள் கூட்டம் அளவிட முடியாதது. காரணம், தாமிரபரணி நதிக்கரையில் தவமிருந்த ஸ்ரீகாந்திமதிக்கு நெல்லையப்பர் அருள்பாலித்த நாள் ஒரு தைப்பூச நாளே.

எல்லாவற்றும் மேலாக 19ஆம் நூற்றாண்டில் வள்ளலார் நிகழ்த்திய அற்புதம் எவரையும் பிரமிக்க வைக்கும். வள்ளல் பெருமான் சித்திவளாகக் கூடத்தில் அமர்ந்திருந்த அன்பர்களை பெருங்கருணையோடு நோக்கி,

"அருட்பெருஞ்சோதி ஆண்டவரை வழிபட்டு உய்யுங்கள்'' என்று கூறிவிட்டு அறைக்குள் சென்று கதவைத் தாழிட்டுக்கொண்டார். பின் இரண்டரை நாழிகை அளவில் அருட் பெருஞ்சோதியாகிய ஆண்டவனோடு ஐக்கியமாகி விட்டார். அன்றும் தைப்பூசத் திருநாளே.

பழனியில் தைப்பூசத் திருவிழா பத்து நாள்கள் கொண்டாடப்படுகிறது. தமிழகத்தின் பல பகுதிகளில் இருந்தும் பக்தர்கள் பழனி முருகன் கோயிலுக்கு பாத யாத்திரையாக வருகிறார்கள். இவ்வாறு பாத யாத்திரை செல்வதால் பக்தர்களுக்கு ஆன்ம பலமும், உடல் நலமும் ஒருங்கே பெருகுகிறது. மன உளைச்சல் அகன்று உள்ளத்தில் உற்சாகம் பிறக்கிறது.

தொழில் காரணமாகவும், வணிகத்தின் பொருட்டும் வெளிநாடுகளுக்கு குடி பெயர்ந்து சென்ற தமிழர்கள் முருக வழிபாட்டு நெறியையும் உடன்கொண்டு சென்றார்கள் என்றே சொல்லலாம். மலேசியா, சிங்கப்பூர், இலங்கை, பினாங்கு, செய்கோன், மொரீஷியஸ் முதலிய வெளிநாடுகளிலும் தைப்பூசத் திருவிழா மிகவும் விமர்சையாகக் கொண்டாடப்படுகிறது.

..செல்லப்பிள்ளையை வணங்குவோமா: இன்று தைப்பூசம்

தினமலர் –

போகர் என்னும் சித்தரால் வழிபாடு செய்யப்பட்ட நவபாஷாணத்தால் ஆன முருகப்பெருமான், பழநியில் கோயில் கொண்டு அருள்பாலிக்கிறார். இவர் சிவபார்வதிக்கு மட்டுமல்ல, பக்தர்களுக்கும் செல்லப்பிள்ளையாக விளங்குகிறார். இந்நாளில், இவரை இருந்த இடத்தில் இருந்தே சிந்தித்தாலே போதும். இப்பிறவிக்கு வேண்டிய பொருளும், மறுபிறவி இல்லாமலும் செய்து விடுவார். சித்தர்களுக்கெல்லாம் தலைமைச் சித்தராக முருகப்பெருமான் இங்கு இருப்பதால் இத்தலத்திற்கு சித்தன்வாழ்வு என்றும் பெயருண்டு.

பழநிமுருகன் ஒரு சித்தரைப் போல முற்றும் துறந்து ஆண்டிக்கோலத்தில் அருள்வதால் பழநியாண்டி என்று அழைப்பர். நாரதர் கொடுத்த மாங்கனியை தனக்கு வழங்காமல், விநாயகப்பெருமானுக்குக் கொடுத்ததால் சினம் கொண்ட முருகப்பெருமான் இங்கு ஆண்டியாக இருப்பதாக தல வரலாறு கூறுகிறது. ஆனாலும், பக்தர்கள் அவர் மீது கொண்ட அன்பால் ராஜாங்க அலங்காரத்தில் பட்டுபீதாம்பரதாரியாக கிரீடத்துடன் ராஜாவாக வழிபாடு செய்வதையே விரும்புகின்றனர். பழநியப்பன் முருகபக்தர்களின் செல்லப்பிள்ளை அல்லவா! இதனால் இப்படி ஒரு அலங்காரம்!

மனிதர்கள் விரும்பினாலும், விரும்பாவிட்டாலும் வாழ்வில் இன்ப துன்பம் என்னும் இருவேறு சூழ்நிலைகளைச் சந்தித்துத் தான் ஆகவேண்டும். நம் ஒவ்வொருவர் வாழ்விலும் இரவுபகல் போல இன்பமும் துன்பமும் மாறி மாறி வருகிறது. ஆனால், மனம் ஒருபோதும் தடுமாறக்கூடாது. மனம், மொழி, மெய் ஆகிய மூன்றாலும் நல்லதையே சிந்திக்க வேண்டும். அதற்கான நல்லறிவைத் தரும் ஞானபண்டிதனாக முருகப்பெருமான் இத்தலத்தில் அருள்பாலிக்கிறார்.

பகைவனுக்கும் அருளும் கருணை உள்ளம் கொண்டவர் அவர். அம்மையப்பர் மீது கோபம் கொண்டு ஆண்டியானவர் என்று பழநி தலபுராணம் கூறுகிறது. ஆனால், தத்துவரீதியாக இவ்விஷயம் இப்படியல்ல. அவர் தனக்கென எதுவும் வைத்துக் கொள்ளாமல் தன்னை நாடிவருபவருக்கு அருளை வாரி வழங்குவதற்காகவே இக்கோலம் கொண்டிருக்கிறார். அதனால் தான் பழநி சென்று வழிபடுபவர்கள் செல்வவளம் மிக்கவர்கள் ஆகிறார்கள். தைப்பூச நன்னாளில் ஞானபண்டிதனைச் சரணடைந்து இந்த பிறவிக்கு தேவையான செல்வமும், வாழ்வுக்குப் பிறகு அவனது கந்தலோகத்தில் வாழும் பாக்கியமும் பெறுவோம்.

தைப்பூசம் என்றால் என்ன?

Tell A Friend!
Type In Your Name:
Type In Your Email:
Your Friend's Email:
Your Comments:

Receive copy:

PLEASE GIVE YOUR FEEDBACK


*Name:  

*E-mail:  

*Comments:


*Enter number in the text box below



Post your comments to Facebook




Designed and maintained by AKR Consultants