Bookmark and Share 


Healthcare Tips
Parents Home
Couples Suit
Spiritual Path
Student's Corner
Youth Resort
Management
Lighter Moments
Entertainment
Serious Side
World Tour
Internet Links
Snippets

Tamil Software
அழகி மென்பொருள்
  
Tamil-English bilingual webmagazine dedicated to education of the masses through E-books, articles, worldwide informations, Slideshows,
Presentations on various subjects, photographs and images, moral and objective oriented stories and Lectures including audio and video

இ(எ)ன்றும் பொருந்தும்..
Harihara Mahadeva

Courtesy: KTR, Chennai

மாத்திரை 12 - இ(எ)ன்றும் பொருந்தும்........

இன்றைக்கும், என்றைக்கும் பொருந்தும் ஒரு மகாபாரதக் கதை.

இளைஞன் கௌசிகனுக்குத் தள்ளாடும் வயதில் தாய் தந்தையர். அவர்களது ஒரே மகன் அவன். அவன் பெற்றோரைப் பிரிந்து காட்டுக்குச் சென்று தவம் செய்யப் போகிறேன் என்று கிளம்பி விட்டான்.

"நீயும் போய் வ¨ட்டாயானால் இந்த வயசான காலத்தில் எங்களை யாரப்பா கவனித்துக் கொள்வது?" பெற்ற தாய் அவனது காலில் விழாத குறையாகக் கெஞ்சினாள். பயனில்லை.

காட்டுக்குச் சென்றான். பல காலம் கடுந்தவம் புரிந்தான். பலன் கிட்டியது. இறைவனிடம் தவ வலிமை பெற்றான்.

ஒரு நாள் இறைவழிபாடு செய்து கொண்டிருந்த போது மரத்திலிருந்து ஒரு கொக்கு எச்சமிட அது அவன் தலையில் விழுந்தது. கோபமுற்ற அவன் கொக்கை நோக்க, அவனின் கொடூரப் பார்வையில் கொக்கு பொசுங்கியது.

"ஐயையோ, ஒரு உயிரை அநியாயமாகக் கொன்று விட்டேனே? பெற்ற தவப்பயன் இப்படி வீணாகி விட்டதே?" அது காலங்கடந்த புலம்பல் ஆனது.

சில நாட்கள் சென்றன. வழக்கமான யாசகம். ஒரு வீட்டின் வாயிலில் நின்றான். அவனைக் கண்ட வீட்டு எஜமானி அவனுக்கு பிட்சை போடுவதற்காக எத்தனம் செய்யும் போது அவளது கணவன் அப்போது தான் உள்ளே நுழைந்தான். கட்டினவனுக்குப் பணிவிடை செய்து விட்டு வந்த போது சிறிது நேரமாகி விட்டது.

"மன்னிக்கவும் முனிவரே! சிறிது தாமதமாகி விட்டது" அவளது வார்த்தைகள் முடிவுறாத நிலையில் முனிவருக்கு மூக்குக்கு மேல் கோபம் வந்து விட்டது.

"என் போன்ற முனிவனை விட உன்னைக் கொண்டவன் பெரியவனாகி விட்டானோ? இந்தா பிடி சாபத்தை" முனிவன் முடிப்பதற்குள் அந்த பெண்மணி முந்திக் கொண்டு விட்டாள்.

"முனிவரே! என்னைக் கொக்கு என்று நினைத்து விட்டீரா? இந்தப் பதிவிரதையிடம் உமது சாபம் பலிக்காது" பொட்டிலடித்தாற் போன்ற பதிலால் முனிவனது ஆணவம் இறங்கி விட்டது.

"அதெப்படி அம்மணி? உனக்கு அந்தக் கொக்கு பற்றிய கதை தெரிய வந்தது?" அப்பாவியாகக் கேட்டான் முனிவன்.

"எல்லாம் எனது பதிவிரதா பலன். முனிவரே! எதற்கெடுத்தாலும் இந்த மாதிரி சாபம் இடுவதை விட்டு விட்டு, எது தர்மம் என்று தெரிந்து வாரும்" ஆணித்தரமாக வந்தது அவளது பதில்.

"எங்கு போய்த் தெரிவது? யாரிடம் போய் அறிவது?" அந்தப் பதிவிரதையின் முன் கூனிக் குறுகிப் போனான் முனிவன்.

"எங்கும் திரிய வேண்டாம். மதுரா நகரில் ................. என்று ஒருவர் இருக்கிறார். அவர் உமக்குச் சரியாக பதிலளிப்பார்". முனிவனது மறுமொழிக்குக் காத்திராமல் விடுவிடுவென்று உள்ளே சென்று விட்டாள் அந்தப் பெண்மணி.

"இவள் சொன்ன அந்த மனிதர் நிச்சயமாக என்னைப் போல் ஒரு பெரிய முனிவராகத் தான் இருக்க வேண்டும்." கற்பனைக் கோட்டைகளுடன் சென்ற முனிவனுக்கு பதிவிரதை அடையாளம் காட்டிய ஆளைக் கண்டதும் "சீ", இவனா எனக்கு நீதி தர்மத்தைப் போதிக்கப் போகிறவன்?" கற்பனைகள் தவிடு பொடியாகி விட்டன.

"அந்த ஆள் ஒரு கசாப்புக் கடையை நடத்தும் கொலைகாரப் பாவியாகவா இருக்க வேண்டும்? இவன் எனக்கு என்ன நீதி தர்மத்தைப் போதித்து விடப் போகிறான்?" தனது விதியை நொந்து கொண்டு அவனிடம் சென்றான். வந்த விஷயத்தைக் கூறுமுன்

"உயிர்களைக் கொல்வது பாவமில்லையா?" அறிவுரையுடன் ஆரம்பித்தான். வாங்கிக் கட்டிக் கொண்டான். "எது பாவம் முனிவரே? தாங்கள் கொக்கைக் கொன்ற பாவத்தை விடவா? தாங்கள் பல காலம் கொடிய தவமிருந்து பெற்றதன் பலனை அந்த ஒரு நொடிக் கோபத்தில் தொலைத்ததை விடவா? அதன் பின் ஒரு பெண்மணியிடம் உமது சாபம் எடுபடாது போன கதையை விடவா?" ஸ்தம்பித்து நின்ற முனிவரைத் தன் வீட்டிற்கு அழைத்துச் சென்றான்.

"முனிவரே! ஆண்டவன் படைப்பில் ஒரு உயிர் இன்னொரு உயிருக்கு இரையாக ஆக்கப்பட்டிருக்கிறது. புழுவுக்கு மண் இரையாகும் அதே நேரத்தில் புழு மடிந்து மக்கி பயிருக்கு உயிரான உரமாகிறது. அதே புழு மீனுக்கு உணவாகிறது. மீன் மனிதனுக்கு உணவாகிறது. நாம் சுவாசிக்கும் போது, நடக்கும் போது எத்தனையோ உயிர்கள் நாம் அறிந்தும், அறியாமலும் கொல்லப்படுகின்றன. அதனால் நாம் கொலைகாரர்கள் ஆகி விடுவோமா?" தொடர்ந்தான்.

"காலை விடியலில் தொடங்கி அந்த உமுறும் சிங்கம் சோம்பித் திரியாது ஓடிப் பிடித்தால் தான் துள்ளும் அந்த மானை தனது இரையாக்கிக் கொள்ள இயலும். அந்த மானுக்கோ அதை விட வேகமாக ஓடித் தப்பினால் தான் தனது உயிரைத் தக்க வைக்க முடியும். ஒரு மானாக இருந்தாலும் சரி சிங்கமாக இருந்தாலும் சரி இறைவனால் தனக்கு இடப்பட்ட வேலையைச் சரிவரச் செய்வதில் தான் அதன் தர்மம் அடங்கியிருக்கிறது. சிங்கம் செய்வது அநீதி என்றும், மானை அது கொல்வது தர்மம் அல்ல என்றும் கூற முடியுமா? இரண்டுமே இறைவனது அரிய படைப்புகளுள் ஒன்று தான்" கை தேர்ந்த ஒருவன் சாதுரியமாகப் பேசியது தனது வாயில் போன ஈ தெரியாதது போல முனிவன் அவனைக் கண் கொட்டாதவாறு பார்த்துக் கொண்டிருந்தான்.

"எனது குடும்பத் தொழில் கசாப்புக் கடை வைத்து காலம் ஓட்டுவது. எனது தந்தை எனக்குக் கற்றுக் கொடுத்த தொழில் அதுவே. என்னைப் பெற்று வளர்த்து ஆளாக்கியவர்கள் எனது பெற்றோர்கள். அவர்களுக்கு அந்திமக் காலம் வரை பணிவிடை செய்து அவர்களைக் கண் கலங்காது பார்க்க வைக்க எனக்கு உறுதுணையாக இருக்கும் இந்தத் தொழில் எனது வயிற்றுப் பிழைப்பு. எப்படி அநீதியான தொழிலாக முடியும்? உமது பாஷையில் சொல்வதானால் அந்தக் கொலைத் தொழில் தர்மத்துக்கு விரோதமானது என்று உம்மால் உறுதியாகச் சொல்ல முடியுமா?"

ஆயிரம் சம்மட்டிகள் கொண்டு அடித்தாற் போன்ற அவன் பேச்சு முடிந்தது.

தனது வீட்டிற்கு அழைத்துச் சென்றான். வயதான தனது தாய், தந்தையை அறிமுகம் செய்து வைத்தான்.

"தந்தையே! தாயே! நீதி, தர்மம் என்றால் என்ன என்பதை என்னிடம் கேட்டுத் தெரிந்து கொள்ள இந்த முனிவர் வந்திருக்கிறாராம். நீங்களே சொல்லுங்கள். வயதான உங்கள் இருவருக்கும் சேவை செய்வதை விட கட்டிய மனைவியையும் பெற்ற மக்களையும் காப்பாற்றுவதை விட வேறென்ன எனக்குத் தெரியும்? தங்களுக்குத் தெரிந்தால் இவரிடம் சொல்லுங்கள்" தந்தையின் காலில் விழுந்தான்.

"அப்பனே! என்னை மன்னித்து விடு. காட்டில் பல காலம் தவமிருந்தும் பெற முடியாத நீதி தர்மத்தை நீ உனது செய்கையால் எனக்கு உணர்த்தி விட்டாய். உனது வார்த்தைகள் என்னை ஈட்டியாகக் குத்தியது என்னவோ உண்மை தான். ஆனால் உனது அரிய சேவை பெற்றோருக்கு நீ செய்யும் பணி விடை என் அறிவுக் கண்களைத் திறந்தது, அதை விடப் பெரிய உண்மை."

முனிவன் அந்தக் கசாப்புக் கடைக்காரன் காலில் விழுந்தான். தன்னைப் பெற்றவர்களிடத்தில் நேராகச் சென்றான். அவர்களுக்கு உத்தம சத்புத்திரனானான் அவரவர் தனக்கு இடப்பட்ட கடமையைச் சரிவரச் செய்வதே நீதி, தர்மம் என்பதை உணர்ந்தான்.

அன்று சொன்ன பாரதக் கதை இன்றும் பொருந்தும். இன்றைய இளைஞர்களுக்கு மெத்தப் பொருந்தும்.

Tell A Friend!
Type In Your Name:
Type In Your Email:
Your Friend's Email:
Your Comments:

Receive copy:

PLEASE GIVE YOUR FEEDBACK


*Name:  

*E-mail:  

*Comments:


*Enter number in the text box below



Post your comments to Facebook




Designed and maintained by AKR Consultants