Bookmark and Share 


Healthcare Tips
Parents Home
Couples Suit
Spiritual Path
Student's Corner
Youth Resort
Management
Lighter Moments
Entertainment
Serious Side
World Tour
Internet Links
Snippets

Tamil Software
அழகி மென்பொருள்
  
Tamil-English bilingual webmagazine dedicated to education of the masses through E-books, articles, worldwide informations, Slideshows,
Presentations on various subjects, photographs and images, moral and objective oriented stories and Lectures including audio and video

அபிராமி அந்தாதியும் -காமகோட்டமும்

Courtesy: KTR, Chennai

உயிரையும் உடலையும் பார்த்துக் கொள்கிறவன் அவன்

அபிராமி அந்தாதியும் -காமகோட்டமும்

மேலுள்ள தலைப்பில் ஒரு சிறு புத்தகம் பிரசுரிக்க ஸ்ரீ பெரியவர்கள் விரும்பினார்கள் . அதற்குச் சில தினங்கள் முன் ஒரு நாள் என்னை வரும்படி உத்தரவு வந்தது. நான் தர்சனம் செய்து கொண்டபோது , அவர்கள் "அபிராமிபட்டர் அநேகமாக முழுக்க, காமாக்ஷியைப் பற்றி, அவருடைய அந்தாதியில் பாடியிருக்கிறார் தெரியுமா ?", என்றார் . நான் " இல்லையே ! அபிராமி பற்றித்தான் பாடியிருக்கிறார் " என்றேன். ஸ்ரீ பெரியவர்கள் ,"அபிராமி அவருக்கு அபிமான தேவதை ஆனால் உபாசனா தேவதையான காமாக்ஷியைப் பற்றித்தான் பெரும்பாலும் பாடியிருக்கிறார் என்று ஊகித்துப் பார்த்தால் சில பாடல்களிலிருந்து தெரியும் . "எப்படின்னு தெரியுமா? என்று சொல்லியபின் , அபிராமி அந்தாதியிலிருந்து ஒரு பாட்டை சொன்னார்கள் .

"துணையும், தொழும் தெய்வமும் பெற்ற தாயும், சுருதிகளின்
பணையும் கொழுந்தும் பதிகொண்ட வேரும்-பனி மலர்ப்பூங்
கணையும், கருப்புச் சிலையும், மென் பாசாங்குசமும், கையில்
அணையும் திரிபுர சுந்தரி-ஆவது அறிந்தனமே. "

இந்தப் பாட்டில் சொல்லியிருக்கும் ஆயுதங்கள் எல்லாம் திருகடையூர் அபிராமி அம்பாளின் கையில் இல்லை . இந்த ஆயுதங்கள் கூடிய திரிபுர சுந்தரியின் கருஞ்சிலா மூர்த்தி காஞ்சியில் உள்ள காமாக்ஷியைத் தவிர வேறு எங்குமில்லை. " பிறகு பெரியவர்கள் " காமாக்ஷி எந்த ஆசனம் போட்டு உட்கார்ந்திருகிறாள்?" என்று கேட்டபோது , நான் "பத்மாசனம் " என்றேன். அதற்கு பெரியவர்கள் " இல்லை "யோகாசனம்" என்று கூறி தானே யோகாசனம் போட்டு காட்டினார்கள் . பிறகு "இந்த யோகாசனத்தில் இருபாதங்களும் ஒன்றாக இணையும் . சுக்ஷும்னா நாடி தானாக மேலே கிளம்பும். அம்பாள் கோவிலில் காமாக்ஷி , அசார்யாள் , துர்வாசர் ஆகிய மூன்று மூர்த்திகளுமே யோகாசனத்தில் தான் இருகின்றன" என்று சொல்லி பெரியவர்கள் என்னை அழைத்து போய் காட்டினார்கள் .

தேனம்பாக்கம் சிவாஸ்தானம். ஸ்ரீகாஞ்சிப் பெரியவர்கள் முகாம். ஸ்ரீபெரியவர்கள் ஜன்னல் வழியாகப் பக்தர்களுக்குத் தரிசனம் தரும் இடம். ஸ்ரீ பெரியவர்களுக்கு அருகில் அணுக்கத் தொண்டர்கள். அவர்கள் அருகில் என் மருமான்.

“நாராயணா!” தம் இயல்பாக ஸ்ரீபெரியவர்கள் வாயிலிருந்து சொல் உதிர்ந்தது.

“ஏன்?” – கணீரென்ற குரலில் மறுகுரல்.

குரல் கொடுப்பவரின் இயல்பு அது.

‘உனக்கு எப்படித் தெரியும்?’ என்று கேட்கிறீர்களா? என் மருமான் நாராயணனின் இயல்பு எனக்குத் தெரியாமல் இருக்குமா? விஷ்ணுபுரம் சாதுநாராயணன் என்றால் பலருமே அவனை இனம் கண்டுகொள்வார்கள்.

“அட! நீ இங்கேதான் இருக்கியா?” என்று புன்முறுவல் பூத்த பெரியவர்கள், “உனக்கு இதயம் பற்றித் தெரியுமோ? கடிகாரம் மாதிரி அது கனகணக்காய் அடித்துக் கொள்கிறதே, எப்படி?” என்கிறார்கள்.

“ஸ்ரீபெரியவர்கள் எந்தப் பேச்சுக்கு அடிபோடுகிறார்கள்?” என்று விளங்காமல் அவன் மவுனம் சாதிக்கிறான்.

“கடிகாரத்தைப் பார்த்து இதயம் ஓடுகிறதா? இல்லை, இதயத்தைப் பார்த்துக் கடிகாரம் கண்டுபிடித்தார்களா?”

யாரும் பதில் பேசவில்லை.

“கடிகாரத்திலே பல் சக்கரம் பழுதுபட்டுவிட்டால், துடிப்பு தடுமாறிப் போகிறது. ஒன்று, நேரத்தை அதிகம் காட்டுகிறது. அல்லது குறைத்துக் காட்டுகிறது. ரிப்பேர் செய்துவிட்டால் சரியான நேரம் காட்டுகிறது. அதுபோல் இதயத் துடிப்பும் அப்படித் தாளம் போடுவது உண்டாமே! உனக்குத் தெரியுமோ?”

“ஆமாம்.. இப்படி ஓர் இதயக்கோளாறு ஏற்படுவது உண்டு என்று கேள்விப்பட்டிருக்கிறேன்!” பலகுரல்கள் ஒரு குரலாக ‘றோம்’ போடுகின்றன.

அந்தப் பேச்சு அப்போதைக்கு அந்த இடத்திலேயே கத்தரித்து நிற்கிறது.

தரிசனத்தை முடித்துக்கொண்டு, நாராயணன் சென்னை வரும் பஸ் ஒன்றில், அமருகிறான். அவனுக்கு அருகில் அமர்பவர், “நீங்கள் என்ன சென்னைக்கோ?” என்று கேட்கிறார்.

கண்டக்டர் டிக்கெட் கேட்டு வரும்போது, “சென்னைக்கு இரண்டு டிக்கெட்!” என்று ரூபாய் நோட்டை நீட்டுகிறார்.

“நீங்கள் எதற்காக எனக்கு டிக்கெட் வாங்குவது?” என்று மறுத்துத் தன் டிக்கெட்டுக்குத் தானே பணம் கொடுக்கிறான் நாராயணன்.

“நான் ஒரு டாக்டர்! ஹார்ட் ஸ்பெஷலிஸ்ட்! உங்களிடம் பெரியவர்கள் இதயம் பற்றிப் பேசினார்களே! நீங்கள் சொன்னால், நான் ஈ.ஸி.ஜி. கருவியோடு வருகிறேன். ஸ்ரீபெரியவர்கள் விரும்பினால் எடுத்துப் பார்க்கலாமே!” என்கிறார் அவர்.

“சித்தன் போக்கு – சிவன் போக்கு. அதிகம் கேட்டு நம் அறியாமையை அம்பலப்படுத்தாமல் விட்டார்களே! அதுவே நம் அதிர்ஷ்டம்!” நாராயணன் மறுத்துவிடுகிறான். ஆனால் அந்த டாக்டர் விடவில்லை. அவனோடு நட்புறவு கொண்டு, “நாம் முயன்று பார்ப்போம். முடியாவிட்டால் நமக்கு வருத்தமா, என்ன?” என்று அவனை எப்படியோ சரிக்கட்டி விடுகிறார்.

அன்று குருவாரம். ஒருமணி சுமாருக்கு என் வீட்டு வாசலில் ஒரு கார் வந்து நிற்கிறது. அதிலிருந்து இறங்கிய டாக்டரை எனக்கு அறிமுகம் செய்து வைத்து, “புறப்படு!” என்கிறான்.

“எங்கே?”

"வேறு எங்கே? காஞ்சிபுரத்துக்குத்தான். ஸ்ரீபெரியவர்கள் தரிசனத்துக்கு!”

வெளிப்பட மறுத்தாலும், என் மனம் உள்ளுக்குள்ளே பெரியவர்களைத் தரிசிக்கப் புறப்பட்டு விடுகிறது.

கார் எங்களை ஏற்றிக்கொண்டு, டாக்டர் வீட்டுக்குச் சென்று அவர் துணைவியாரையும் அழைத்துக் கொண்டு காஞ்சிக்குப் புறப்படுகிறது. நாங்கள் போனபொழுது, ஸ்ரீபெரியவர்களைத் தரிசிக்கக் கூட்டம் வரிசையில் நிற்கிறது.

நாராயணன் அணுக்கத் தொண்டர்களில் ஒருவரை அணுகி, அவர்களிடம் விவரம் கூறி ஸ்ரீபெரியவர்கள் காதில் போடச் சொல்கிறார்.

“அதெல்லாம் முடியாது. அன்றைக்கு ஸ்ரீபெரியவர்கள் ஏதோ சொன்னார் என்று ஒரு டாக்டரை அழைத்து வந்திருக்கிறாயே! எங்களால் ஸ்ரீபெரியவர்களிடம் பாட்டு வாங்க முடியாது. வேண்டுமானால், நீயே சொல்லிக்கொள்!” என்று அவர்கள் அவனை ஒரு பாட்டுப் பாடித் தீர்த்துவிடுகிறார்கள்.

நாங்கள் மவுன சாட்சிகள் ஆக, நாராயணனோ ஒன்றும் நடவாதது போல் எங்கள் அருகில் வந்து நிற்கிறான்.

தரிசனம் கொடுக்க ஜன்னல் அண்டை வந்து அமர்ந்த ஸ்ரீபெரியவர்கள், “இன்று டாக்டர் வெங்கிடி வருவாரோ?” என்று கேட்கிறார்கள்.

“குருவாரம். வருவார் என்று தான் நினைக்கிறோம்.”

“அதெப்படி? நான் வரச் சொன்னதாக அவருக்குச் சொல்லி அனுப்பு!”

ஸ்ரீபெரியவர்கள் சொன்ன சில நொடிகளுக்கு எல்லாம் டாக்டர் வெங்கிடி தாமாகவே வந்துவிடுகிறார்.

“உங்களுக்கு நூறு ஆயுசு. இப்பொழுதுதான் ஸ்ரீபெரியவர்கள் ஆக்ஞை ஆயிற்று. தங்களைக் கூப்பிட்டு வரும்படி.”

ஸ்ரீபெரியவர்கள் புன்முறுவல் பூத்தபடி, “நாராயணா! நீ யாரையோ கூட்டி வந்திருக்கிறாயே அவர் யாரு?” என்ரு கேட்கிறார்கள்.

“ஒரு டாக்டர், என் மாமா எல்லோருமாக வந்திருக்கிறோம்.”

“அப்படியா? அவரை வரச் சொல்லு!” என்று ஸ்ரீபெரியவர்கள் உத்தரவு ஆனதும், அணுக்கத் தொண்டர்கள் ‘க்யூ’ கூட்டத்துக்குத் தடை போடுகிறார்கள். என்னையும் துரத்தாத தோஷமாக ஓரம் கட்ட முனைகிறார்கள்.

ஸ்ரீபெரியவர்கள், “யாரையும் தடுக்காதே!” என்றதும், நான் டாக்டரோடு ஸ்ரீபெரியவர்கள் அருகில் செல்கிறேன். ‘க்யூ’வும் தாராளமாகத் தரிசனம் செய்கிறது.

“பக்க வாத்தியக்காரன் போல உன் கையிலே அதென்ன கருவி?”

“ஈ.ஸி.ஜி. கருவி. அன்று பெரியவர்கள் பேசியதைக் கேட்டதனால் எடுத்து வந்தேன்!”

கருவியை ஜன்னலில் எடுத்து வைத்து, அதோடு இணைந்த ரப்பர் குழாயை நீட்டுகிறார் டாக்டர்.

“இவற்றை என்ன செய்ய வேண்டும்?”

“இன்ன இன்ன இடத்தில், இந்தப் பசையில் ஒட்டிக் கொள்ள வேண்டும்!”

“யாரும் தொடாமல் நானாக ஒட்டிக் கொள்ள முடியும் இல்லையோ?”

“தாராளமாக!”

ஸ்ரீபெரியவாள் பொருத்திக் கொண்டதும், ஈ.ஸி.ஜி. கருவி இயங்கியது. அது பதிய வைத்த குறிப்பைச் சோதித்த டாக்டர், “ஸ்ரீபெரியவர்கள் வயதுக்கு ஏற்ப ‘ஹார்ட்’ கன கச்சிதமாக இயங்குகிறது. ஒரு குறைபாடும் இல்லை!” என்கிறார்.

“அது நீ சொல்லித்தான் எனக்குத் தெரியணுமோ?”

டாக்டர் கன்னத்தில் போட்டுக் கொள்கிறார்.

அப்புறம் திசைமாறிப் போன பேச்சு ஏறக்குறைய அரைமணிக்குப் பின், விட்ட இடத்தையே தொடுகிறது.

“ஆமாம், சிலசமயம் பல்ஸ் மிஸ் ஆகிறது என்கிறார்களே! நாடித்துடிப்பு இப்படித் தப்பலாமா?” என்ரு ஸ்ரீபெரியவர்கள் கேட்கிறார்கள்.

“இரண்டு மூன்று பல்ஸ் மிஸ் ஆகிறதனாலே தப்பு இல்லை!”

“எங்க அண்ணாவுக்கு ஏழெட்டு பல்ஸ்கூட மிஸ் ஆகிறது. சவுக்கியமாகத்தான் இருக்கிறார்!” இது டாக்டர் வெங்கிடி.

”இதிலே இருந்து என்ன தெரிகிறது? எது ‘மிஸ்’ ஆனாலும் நாமே ‘மிஸ்’ ஆகாமல் நம்மைப் பார்த்துக் கொள்ள ஒருவன் இருக்கிறான், இல்லையா?” அவர் கேள்வி எல்லோரையும் மவுனம் ஆக்குகிறது.

“உடம்புக்கு ஒன்றும் இல்லையே என்று கேட்கிறோம். ‘உடம்பைப் பார்த்துக்கோ’ என்று சொல்லுகிறோம். யார் உடம்பை யார் பார்த்துக் கொள்கிறது? உயிர் பிரிந்துவிட்டால் உடம்பைப் பார்த்துக்கொள்ள முடியுமா? உயிரையும் உடலையும் பார்த்துக் கொள்கிறவன் அவன். அவன் அன்றி ஓர் அணுவும் அசையாது என்கிறோமே, அவன் தான் பெரிய வைத்யன். வைத்யோ நாராயணோ ஹரி: என்று அதனால்தான் சொல்லுகிறோம். அவன் உடம்பையும் பார்த்துக் கொள்வான்; உடம்புக்கு உடம்பு வராமலும் பார்த்துக் கொள்வான்; உடம்பே வராமலும், - பிறப்பு – இறப்பு இல்லாமலும் பார்த்துக் கொள்வான். அவன் தந்த உடம்புக்கு ஏதாவது நோய் நொடி வந்தால், உங்களைப் போன்ற டாக்டர், பிணி தீர்த்து உதவுகிறீர்கள். அதனாலே உங்கள் பணி பெரிசு. எல்லோரும் ஜீவனம் நடத்தப் பொருள் வேணும். அதனாலே சக்தி உள்ளவர்களிடம் பீஸ் வாங்கி, சக்தி இல்லாதவர்களிடம் பீஸ் வாங்காமல், அல்லது, குறைத்து வாங்கி ஜீவனோபாயத்துக்கு வழி செய்து கொண்டால், எல்லோரும் பிரம்மானந்தமாக வாழ முடியும். என்ன, நான் சொல்கிறது?” என்கிறார்கள் பெரியவர்கள்.

டாக்டர் சாஷ்டாங்கமாக விழுந்து நமஸ்கரிக்கிறார். அவர் அருகில் நின்ற பெண்மணி பஞ்சாங்க நமஸ்காரம் செய்கிறார்.

“இவள் உன் சம்சாரமோ? – பயப்படாதே, அம்மா! உனக்குப் பரமக்ஷேமம் உண்டாகும்!” என்று பெரியவர்கள் கூறியபோதே, அவளை விட்டுச் சங்காதோஷம் (செய்வினை) பறந்தாற்போல் இருக்கிறது.

டாக்டர் விழிகளில் நீர் பனிக்க நிற்கிறார்.

“ஆமாம், உன் பெயர் என்ன சொன்னே?”

”பிரம்மானந்தம்!”

ஸ்ரீபெரியவர்கள் முறுவல் பூக்கிறார்கள்.

ஜெய ஜெய சங்கர! ஹர ஹர சங்கர!!

Tell A Friend!
Type In Your Name:
Type In Your Email:
Your Friend's Email:
Your Comments:

Receive copy:

PLEASE GIVE YOUR FEEDBACK


*Name:  

*E-mail:  

*Comments:


*Enter number in the text box below



Post your comments to Facebook




Designed and maintained by AKR Consultants