- Kanchi Periva
Courtesy:
திருச்சியில் ஒரு பக்தர், புகைப்படக்காரர், சிறிய ஸ்டுடியோ வைத்திருந்தார், வீட்டில் மகா பெரியவா படம் பிரதானமாக இருக்கும். தினமும் காலையில் எழுந்து குளித்துவிட்டு மகா பெரியவா படத்துக்கு நெய்வேத்தியம் படைத்துவிட்டுத் தான் எந்த வேலையையும் தொடங்குவார். உதடுகள் எப்பொழுதும் மகாபெரியவா நாமாவை உச்சரித்துக்கொண்டே இருக்கும்.
ஒரு தடவை பெரியவா ஆந்திர மாநிலத்திலுள்ள கர்னுலுக்கு விஜயம் செய்திருந்தார். அதுவோ உஷ்ணப்ரதேசம், வெயில் கடுமையாகக் கொளுதிக் கொண்டிருந்தது. திருச்சியில் இருந்த இந்தப் புகைப்படக் கலைஞருக்குப் பெரியவாளை தரிசிக்க வேண்டும் என்ற ஆசை வந்தது.
அன்று காலை ரயிலில் புறப்படும் முன், மகா பெரியவா படத்துக்கு ஒரு டம்பளரில் சூடான பாலை வைத்துவிட்டுக் கிளம்பிவிட்டார்.
கர்னுலில் அளவுக்கு அதிகமான பக்தர் கூட்டம், எங்கு திரும்பினாலும் மக்கள் வெள்ளம். புகைப்படக் கலைஞரால் உள்ளே செல்ல முடியவில்லை. சற்று மணல் மேடாக இருந்த ஒரு இடத்தில் ஏறி நின்று மகானை தரிசிக்க முயற்சித்தார், வெய்யிலின் தாக்கம் காலைச் சுடவே கீழே இறங்கிவிட்டார். சரி, சற்றுக் கூட்டம் குறைந்ததும் மாலை வந்து மகானை தரிசிக்கலாம் என்று நினைத்துக் கிளம்பிவிட்டார்.
இவ்வளவு தூரம் வந்தும் மகானை தரிசிக்க முடியவில்லையே என்ற ஏக்கம் அவர் மனசில் இருந்தது. சற்று தூரம் போனதும் தன்னை யாரோ அழைப்பது போல் உணர்ந்து திரும்பிப் பார்க்க, ஒரு பக்தர் வேகமாக இவரிடம் ஓடி வந்தார்.
"நீங்க திருச்சிலேந்து தானே வந்திருக்கீங்க?"
"ஆமாம் "
"பெரியவா உங்களை அழைசிண்டு வரச் சொன்னார்."
"என்னையா?"
"நீங்க போடோக்ராபர் தானே?"
"ஆமாம்"
"அப்படியென்றால் வாருங்கள். விடாப்பிடியாக அவரை அழைத்துக்கொண்டு பெரியவர் முன் நிறுத்தினார் அந்த சிஷ்யர் கைகளைக் கூப்பியவாறு.
கண்களில் நீர் பெருக்கெடுத்து ஓட, புகைப்பட நிபுணர் தன்னை மறந்து அங்கே நின்றார். அவரை ஏற இறங்க ஒரு முறை பார்த்த மகான், "என்னைப் பார்க்கணும்னு இவ்வளவு தூரம் வந்திருக்கே, பார்க்கமப் போனா என்னப்பா அர்த்தம்?" என்றார்.
"கும்பல் நிறைய இருந்தது. அதான் கொஞ்சம் குறைஞ்சவுடன் வரலாம்னு" என்று இழுத்தார் புகைப்படக்காரர்.
"சரி சரி, சாப்பிட்டயோ?"
"சாப்பிட்டேன்"
சில வினாடிகள் தாமதத்திற்குப் பின் மகான் பேசினார், "என் வாயைப் பார்த்தியோ?" நாக்கை வெளியே நீட்டுகிறார், சூடு பட்டது போல் சிவந்து இருந்தது. "உதடெல்லாம் கூடப் புண்ணாயிடுத்து ஏன் தெரியுமா?"
புகைப்பட நிபுணருக்குப் புரியவில்லை.
"நீ பாலை சூடா வச்சுட்டு அவசர அவசரமாக் கிளம்பி வந்துட்டே இல்லையா, அதான்" என்றார்.
திருச்சிக்காரருக்குத் தான் புறப்படும் போது தான் வைத்த படையல் அப்போதுதான் நினைவிற்கு வந்தது. சாஷ்டாங்கமாக மகானின் காலில் விழுந்து "பிரபோ என்னை மன்னியுங்கள்" என்று கதறினார்.
எந்தளவுக்கு பக்தி இருந்திருந்தால் மகான் அந்தப் பாலை ருசித்திருப்பார் என்பதை சற்றே எண்ணிப் பாருங்கள். அது சாத்வீகமான பக்தி. ஆண்டவனே, நீதான் எனக்கு எல்லாம் என்று நினைக்கும் பக்தி.
|
|
Post your comments to Facebook |
Designed and maintained by AKR Consultants

