Bookmark and Share 


Healthcare Tips
Parents Home
Couples Suit
Spiritual Path
Student's Corner
Youth Resort
Management
Lighter Moments
Entertainment
Serious Side
World Tour
Internet Links
Snippets

Tamil Software
அழகி மென்பொருள்
  
Tamil-English bilingual webmagazine dedicated to education of the masses through E-books, articles, worldwide informations, Slideshows,
Presentations on various subjects, photographs and images, moral and objective oriented stories and Lectures including audio and video

மகாபாரதத்தில் ஒரு மார்க்கண்டேயன்

Courtesy: AVR, Chennai

குருக்ஷேத்திர போர்க்களம் - தர்மத்துக்கும் அதர்மத்துக்கும் இடையே நடந்துகொண்டிருந்த பாரதப் போரின் 13-ஆம் நாள்... கௌரவர்களின் சேனாதிபதி துரோணர் அமைத்த பத்ம வியூகத்தை உடைத்தெறியும் நோக்கில் வீரதீரப் போர் புரிந்துகொண்டிருந்தான் அர்ஜுனனின் மகன் அபிமன்யு. அந்த வியூகத்தை எளிதில் உடைக்கும் வல்லமை பெற்றிருந்த அர்ஜுனன் அந்த நேரம், போர்க்களத்தின் மற்றொரு முனையில் சம்சப்தகர்களுடன் போரிட்டுக் கொண்டிருந்தான்.

சரி, பத்ம வியூகத்தை உடைக்கும் தைரியம் அபிமன்யுவுக்கு எப்படி வந்தது? சுபத்திரையின் கர்ப்பத்தில் அபிமன்யு குழந்தையாக இருந்த போது, யுத்த தர்மம் பற்றி தன் அண்ணன் ஸ்ரீ கண்ணனிடம் கேட்டாள் சுபத்திரை. வீரர்களின் அணிவகுப்பை வகைப்படுத்தி வியூகமாக அமைத்து, எதிரியை வெல்லும் முறைகளை... குறிப்பாக, பத்ம வியூகத்தைப் பற்றிச் சொல்லிக் கொண்டிருந்தான் கண்ணன். அதனை உடைத்து உள்ளே நுழையும் முறையை விவரித்துக் கொண்டிருந்தபோது, நடுவில் சிறிது நிறுத்தினான். 'உம்... அப்புறம்?’ என்ற குரல் எங்கிருந்தோ கேட்டது. அது சுபத்திரையின் கர்ப்ப வாசத்திலிருந்த அபிமன்யுவின் ஆர்வக் குரல். அது கண்ணனுக்குத் தெரியும். அதனால், அதற்கு மேல் அவன் கதையைத் தொடரவில்லை. அதற்கான காரணமும் கண்ணனுக்குத்தான் தெரியும்.

தாயின் கர்ப்பத்தில் இருந்தபோதே பத்ம வியூகத்தை உடைத்து உள்ளே புகும் வழிமுறையைப் புரிந்துகொண்டதால், தைரியமாகப் போர்க்களம் வந்துவிட்டான் அபிமன்யு. பத்ம வியூகத்தை உடைத்து உள்ளே நுழையும் ரகசியம்தான் அபிமன்யுவுக்கு தெரியும்; வெளியே வரும் உத்தி தெரியாது என்பதால், அதில் இருந்து அவனைப் பாதுகாப்பாக வெளியே மீட்டு வருவதற்கு உதவியாக வந்திருந்தான் பீமன். ஆனால், உள்ளே நுழைந்துவிட்ட அபிமன்யு, ஒரு கட்டத்தில் அங்கேயே சிக்கிக்கொண்டான். பீமனின் பக்கபலம் அவனுக்குக் கிடைக்கவில்லை. போர்க்களத்தில் ஜயத்ரதன் செய்த மாய வேலைகளே அதற்குக் காரணம்.

துரோணர் விட்ட அம்பு அபிமன்யுவின் தேர்க் கொடியை அறுத்தது. கர்ணனின் அம்பு, தேர்ச் சக்கரத்தை முறித்தது. துரியோதனனின் ஆயுதம் தேர்ப் பாகனைக் கொன்றது. சகுனியின் பாணம் அபிமன்யுவின் வில்லை முறித்தது. துச்சாதனனின் அம்பு அபிமன்யுவை தேரிலிருந்து கீழே தள்ளியது. ஜயத்ரதனின் பாணம், அபிமன்யுவின் கரத்தைக் கிழித்தது. உடம்பெல்லாம் புண்ணாகி, குருதி ஒழுக, நிராயுதபாணியாக நின்றான் அபிமன்யு. எனினும், அதர்ம யுத்தம் புரிந்த கௌரவர்களைக் கண்டு அவன் சிறிதும் அஞ்சவில்லை. தொடர்ந்து போரிட்டான். அப்போது துச்சாதனனின் மகன் கோழை போல் பின்னாலிருந்து தன் கதையால் அபிமன்யுவின் தலையில் ஓங்கி அடித்தான். சுருண்டு விழுந்தவன் எழுந்துவிடுவானோ என்ற பயத்தில் மற்ற மகாரதர்கள் தங்கள் ஆயுதங்களால் வலிமையாகத் தாக்கி, அபிமன்யுவின் உடலில் அடையாளச் சின்னமிட்டனர். உடல் உருக்குலைந்தாலும், உறுதி குலையாத பொலிவோடு அபிமன்யு தரையில் சாய்ந்தான். இல்லை... அவன் சாகவில்லை! 'என்றும் பதினாறு வயது’ என சிவனால் ஆசீர்வதிக்கப்பட்ட மார்க்கண்டேயன் போல இவனும் ஓர் இதிகாச நாயகன் ஆனான். சொர்க்கம் அவன் ஆன்மாவை வரவேற்றது.

களத்தில் மகன் இறந்தது தெரியாமல், தான் வெற்றிபெற்ற பெருமிதத்துடன் திரும்பிக்கொண்டிருந்தான் அர்ஜுனன். வழியில், அவன் கண்ட காட்சி ஒன்று அவனைத் திடுக்கிட வைத்தது. அக்னியை வளர்த்து, அதற்குள் விழுந்து உயிர்த் தியாகம் செய்யத் தயாராக இருந்தான் அந்தணன் ஒருவன். ஸ்ரீ கண்ணனிடம் ரதத்தை நிறுத்தச் சொல்லி, அந்தணன் அக்னியில் விழா வண்ணம் தடுத்தான் அர்ஜுனன். ''ஐயா, என் ஒரே மகன் இன்று போரில் உயிர் துறந்துவிட்டான். இனி நான் வாழ்ந்து என்ன பயன்? என்னைச் சாக விடுங்கள்!'' என்று கெஞ்சினான் அந்தணன். ''பெரியவரே! ஆத்மஹத்தி செய்வது எவ்வளவு பெரிய பாவம்! தங்கள் மகன் போரிலே இறந்தான் என்றால், அவன் வீர சொர்க்கமல்லவா அடைந்திருப்பான்! அதனை எண்ணிப் பெருமைப்படாமல் இப்படிக் கோழைபோல் தற்கொலைக்கு முயல்வது அறிவீனம் அல்லவா?'' என்றான் அர்ஜுனன். ''தத்துவம் சொல்வது எளிதய்யா! தங்களுக்கு இதுபோல் நேர்ந்தால், அப்போது தெரியும்'' என்றான் அந்தணன். அதைக் கேட்டதும், அர்ஜுனன் உணர்ச்சி வசப்பட்டவனாக, ''என் மகனைப் போர்க் களத்திலே இழக்க நேரிட்டால்கூட, தங்களைப் போல் கோழையாகத் தற்கொலை செய்துகொள்ள மாட்டேன். என் மகனின் மரணத்துக்குக் காரணமான எதிரிகளுடன் போரிட்டு, வென்று, அவர்களை அழித்து, அவன் ஆத்மா சாந்தி பெறச் செய்வேன். இது வெறும் வார்த்தையல்ல. நான் சொன்னதைச் செய்யும் க்ஷத்திரியன். சத்தியம் தவறாதவன். நான் சொல்வதைக் கேளுங்கள். தற்கொலை எண்ணத்தை விட்டுச் செல்லுங்கள்'' என்று உறுதி குலையாத குரலில் பேசினான். அந்தணனும் ஆறுதலடைந்து, ''என் மகனே நேரில் வந்து வேண்டுவதுபோல இருக்கிறதப்பா! என் உயிர் காத்த நீ பல்லாண்டு காலம் வாழ வேண்டும்'' என்று வாழ்த்திவிட்டுச் சென்றான்.

அர்ஜுனனின் ரதம் பாசறையை நோக்கி விரைந்தது. அன்றைய யுத்தம் என்னவாகியிருக்கும் என்று அர்ஜுனன் ஊகிக்கும் முன்பே, பாண்டவ வீரர்களில் சிலர் ஓடி வந்து கண்ணீரும் கம்பலையுமாக அபிமன்யுவின் மரணச் செய்தியைக் கூறினர். அதைக் கேட்டதும் அர்ஜுனன் சித்தம் கலங்கி, வெட்டப்பட்ட மரம்போல தேரிலிருந்து சாய்ந்தான். ''அபிமன்யு! அபிமன்யு!'' என வெறிபிடித்தவன் போல், தன் மகனின் சடலத்தைத் தேடி ஓடினான். அபிமன்யுவின் உடலின் மீது விழுந்து அழுது புலம்பினான். தன் அம்பறாத் துணியிலிருந்து அஸ்திரம் ஒன்றை உருவி எடுத்து, அதனைத் தன் மார்பிலே பாய்ச்சி மரணத்தைத் தழுவி, மகனுடன் கலந்துவிட ஆயத்தமானான். அப்போது எதிரே நின்றான், சற்று நேரத்துக்கு முன் அர்ஜுனனால் காப்பாற்றப்பட்ட அந்த அந்தணன்.

''ஓஹோ! க்ஷத்திரிய தர்மம் இவ்வளவுதானா? உபதேசமும் தத்துவமும் பிறருக்குத்தானா? கொடுத்த வாக்கைச் சில விநாடிகளுக்குள்ளேயே மீறுவது தர்மமா?'' என்று நகைத்தான். அந்த அந்தணனின் சொல் அம்புகள் தைத்ததும், அர்ஜுனனின் கையிலிருந்து வில் அம்பு கீழே விழுந்தது.

தன் உயிரைக் காப்பதற்காக, தன் தந்தையான இந்திரனையே அந்தணனாக உருக்கொண்டு வரச் செய்து இந்த நாடகத்தை ஸ்ரீ கண்ணன்தான் நடத்தியிருக்கிறான் என்பதை அறியாத அர்ஜுனன் துயரம் தாங்காமல், 'கிருஷ்ணா...’ என்று கதறி, மயங்கினான்.

பின்னர், கண்ணனின் காக்கும் கரங்களின் ஸ்பரிசம் பட்டு அர்ஜுனன் மீண்டும் சுயநினைவு பெற்றான். ''என் மைந்தன் அபிமன்யுவின் மரணத்துக்குக் காரணமான சத்ருவை இன்று சூர்ய அஸ்தமனத்துக்குள் அழித்துவிடுகிறேன். தவறினால், இன்று அஸ்தமனமானதும் நான் அக்னிப்பிரவேசம் செய்துவிடுவேன். இது கண்ணன் மீது ஆணை!'' என்று சபதம் செய்தான்.

மகனின் மரணத்துக்கு ஜயத்ரதனே காரணம்; பீமனும் மற்ற சகோதரர்களும் அபிமன்யுவுக்கு உதவியாக வர இயலாதவாறு தடுத்தது அவனே என்று தெரிந்ததும், அர்ஜுனன் முகத்தில் கோபாக்னி பொங்கியது. ''கிருஷ்ணா! ஜயத்ரதன் எங்கிருக்கிறானோ, அங்கே தேரைச் செலுத்து'' என்றான்.

அர்ஜுனன் சபதம் கௌரவர்கள் காதுக்கு எட்டியது. 'சூர்யாஸ்தமனம் வரை ஜயத்ரதனை மறைத்து வைத்துக் காப்பாற்றிவிட்டால், அப்புறம் அர்ஜுனன் அக்னிப் பிரவேசம் செய்வான்; குருக்ஷேத்திரப் போர் முடிந்துவிடும்; பாண்டவர்களை இரண்டாவது வனவாசம் செய்யத் துரத்தி விடலாம்!’ என்று மனக்கோட்டை கட்டினான் துரியோதனன். எனவே, எவரும் அறியாத மலைக்குகை ஒன்றில் ஜயத்ரதனைத் தகுந்த பாதுகாப்போடு மறைத்து வைத்துவிட்டான்.

கண்ணன் தேரைச் செலுத்திக் களைத்துவிட்டான். அர்ஜுனன் ஜயத்ரதனைத் தேடிக் காணாமல் நம்பிக்கையிழந்தான். கதிரவன் மேற்கு திசையில் தன் பயணத்தை முடித்துக்கொண்டிருந்தான். திடீரென மேல் வானில் இருள்சூழ ஆரம்பித்தது.

கதிரவன் மறைந்துவிட்டான். அர்ஜுனன் முயற்சி தோற்றது.

பாண்டவர்கள் பதறினர். கண்ணனின் பாதங்களில் விழுந்து கதறினர். 'என்னால் என்ன செய்ய முடியும்? விதியின் வலிமை அப்படி!’ என்பது போல் மௌனம் சாதித்தான் கண்ணன். தன் சபதத்தை நிறைவேற்ற ஆயத்தமானான் அர்ஜுனன்.

அக்னி வளர்க்கப்பட்டது. எடுத்த சபதத்தின்படி அர்ஜுனன் அக்னிப் பிரவேசம் செய்யத் தயாரானான். அவன் அக்னியில் இறங்கி அழியப்போவதைக் காண, ஜயத்ரதனும் ஆவலோடு மறைவிடத்தில் இருந்து வெளியே வந்தான். கௌரவர்களின் கூட்டத்தில் ஒருவனாக, மலை முகட்டில் நின்றுகொண்டான்.

அர்ஜுனன் அக்னியை வலம் வந்தான். கண்ணன் பாதங்களை வணங்கினான்.அப்போது கண்ணன், ''அர்ஜுனா! காண்டீபத்தை உன் கையில் ஏந்தி, நாணேற்றிய வண்ணமே அக்னிப் பிரவேசம் செய். முடியுமானால், தலைகளைக் கொய்து நினைத்த இடத்துக்கு கொண்டு போகும் வல்லமை வாய்ந்த அஸ்திரம் ஒன்றையும் வில்லில் தொடுத்துக்கொண்டே அக்னியை வலம் வா!'' என்றான். அர்ஜுனனும் கிருஷ்ணனின் சொல்லுக்குக் கட்டுப்பட்டு அவ்வாறே செய்தான். திடீரென மேல் வானிலே பிரகாசமான வெளிச்சம் ஒன்று தோன்றியது.

ஆம், உண்மையில் அப்போது அஸ்தமனம் ஆகவில்லை; சூரியன் தற்காலிகமாக மறைக்கப்பட்டிருந்தான்; கண்ணன் தன் ஸுதர்சனச் சக்கரத்தால் சூரியனை மறைத்து வைத்திருந்தான் என்பதை எல்லோரும் புரிந்துகொண்டனர். வியப்படைந்து மேல் வானை நோக்கினான் அர்ஜுனன்.

பேரொளியுடன் சூரியன் தரிசனம் தந்தான். ஸுதர்சனச் சக்கரம் நகர்ந்ததும், இருளெனும் மாயை மறைந்து, மேற்கு திசையில் வானம் சிவப்பொளியை வீசிக் கொண்டிருந்தது.

அர்ஜுனன் கண்களில், தூரத்தில் குன்றின் மீது நின்று கொண்டிருந்த ஜயத்ரதன் தென்பட்டான். ''அர்ஜுனா! அதோ ஜயத்ரதன்! அவன் தலையைக் கொய்து, வனத்திலே தவம் செய்து கொண்டிருக்கும் அவன் தந்தை விருத்தக்ஷத்ரன் என்ற முனிவனின் மடியில் விழச் செய்!'' என்று ஆணையிட்டான் கண்ணன்.

கண்ணிமைக்கும் நேரத்தில், காண்டீபத்திலிருந்து கணை புறப்பட்டது. அது ஜயத்ரதன் தலையைக் கொய்து, விண்ணிலே தூக்கிச் சென்று, வனத்தில் தவம் செய்துகொண்டிருந்த விருத்தக்ஷத்ரன் மடியில் போட்டது. தன் தவத்தை யாரோ கலைப்பதாக எண்ணி, மடியில் விழுந்த தலையைத் தரையில் தள்ளினான் விருத்தக்ஷத்ரன்.

உடனே விருத்தக்ஷத்ரனின் தலை சுக்குநூறாக வெடித்தது.

'தன் மகன் ஜயத்ரதன் தலையை எவன் தரையில் விழச் செய்கிறானோ, அவன் தலை சுக்குநூறாக வெடிக்க வேண்டும்’ என்று வரம் பெற்றிருந்தான் விருத்தக்ஷத்ரன். அவன் வரமே அவனையும் அவன் மகனையும் சேர்த்து அழித்துவிட்டது.

பாண்டவர்களின் கண்கள் ஆனந்தக் கண்ணீர் சொரிந்தன. கண்ணனை அர்ஜுனன் நெஞ்சாரத் தழுவிக்கொண்டான்.

'18 ஆண்டுகள் மட்டுமே வாழ்ந்து, செயற்கரிய செயல்கள் புரிந்து சொர்க்கம் பெற விரும்பி, வரம் பெற்று ஜனித்தவன் அபிமன்யு.

அவன் மரணத்தை வென்ற மாவீரன். மகாபாரதத்தில் ஒரு மார்க்கண்டேயன் அவன்!'' என்று கூறி, பாண்டவர்களைச் சமாதானப்படுத்தினான் கண்ணன்.

Tell A Friend!
Type In Your Name:
Type In Your Email:
Your Friend's Email:
Your Comments:

Receive copy:

PLEASE GIVE YOUR FEEDBACK


*Name:  

*E-mail:  

*Comments:


*Enter number in the text box belowPost your comments to Facebook
Designed and maintained by AKR Consultants