- நான் சித்தர் இல்லீங்கோ
Courtesy: தமிழ்த்தேனீ
1. எங்கள் தெருவில் இருந்த ஒரு வாலிபன் ஓட்டிவந்த ஹீரோ ஹோண்டா திடீரென்று சறுக்கியது, கீழே விழுந்து தேய்த்துக்கொண்டே சென்றது. நெற்றியில் காயம், ரத்தம் வழிந்தது, அந்த வாலிபன் கையால் நெற்றியை அழுத்தியபடி இருந்தார். அதைக் கண்ட நான் எதிரே இருந்த வெற்றிலைபாக்குக் கடைக்குச் சென்று தீக்ககுச்சியை உரசி கைக்குட்டையின் ஒரு ஓரத்தைப் பற்றவைத்துக் கரியாக்கி, அதில் கொஞ்சம் வெல்லம், சுண்ணாம்பு இரண்டையும் கலந்து உள்ளங்கையில் வைத்து நன்றாகச் சூடு பறக்கத் தேய்த்துக் குழைத்து நெற்றியிலிட்டேன். ரத்தம் வருவது நின்றது. ரெண்டு நாளைக்குத் தண்ணி படாமே பாத்துக்கோங்க என்றேன். இரண்டே நாட்களில் அந்தப் பற்று உதிர்ந்தது, காயமும் ஆறியது. அது மட்டுமல்ல, காயம் பட்ட வடுவும் குறுகிய நாட்களிலே மறைந்தது.
2. அந்தக் குளிர்சாதனப் பேருந்தில் ஒருவர் இருமிக்கொண்டே வந்தார். பேருந்து ஓரிடத்தில் நின்றது. "யாரெல்லாம் காப்பி சாப்படறீங்களோ சாப்டுட்டு சீக்கிறம் வாங்க" என்றார் ஓட்டுனர். ஒரு மளிகைக் கடையில் கொஞ்சம் சீரகம் வாங்கிக்கொண்டு பேருந்தில் ஏறி இருமிக் கொண்டிருந்தாரே அவரிடம் கொடுத்து "வாயிலே அடக்கிக்கோங்க, அப்பிடியே கடிச்சி அந்தச் சாறை மட்டும் முழுங்குங்க" என்றேன். சென்னை வந்து சேரும் வரையில் இருமல் சத்தம் கேட்கவே இல்லை. சென்னைக்கு வந்து இறங்கும்போது அந்த இருமல்காரர் என்னிடம் வந்து, "சார், நீங்க சொன்ன மருந்து அமிர்தம் சார், உடனே என் இருமல் நின்னு போச்சு" என்றார்.
3. வில்லிவாக்கத்திலே இருக்கும்போது எங்கள் பக்கத்துக் குடித்தனக்காரரின் குழந்தை அழுது கொண்டே இருந்தது. அழுகையை நிறுத்தவே இல்லை. அந்தக் குழந்தையை வாங்கி அதன் காதைத் தொட்டேன், வீறிட்டு அலறியது.
ஒரு தடிமனான படுக்கை விரிப்பை எடுத்து அதில் அந்தக் குழந்தையை நடுவிலே விட்டு விட்டு அந்தப் படுக்கை விரிப்பின் ஒரு பக்க இரு முனைகளையும் கெட்டியாக ஒருவரைப் பிடிக்கச் சொல்லி, மறு பக்கத்தின் இரு முனைகளையும் நான் பிடித்துக்கொண்டு மூன்று முறை குழந்தையை இரு ஓரங்களுக்கும் உருளுவது போலப் படுக்கை விரிப்பைத் தாழ்த்தியும் உயர்த்தியும் செய்தேன். குழந்தை அழுகையை நிறுத்தி விட்டுச் சிரித்தது.
ஆமாம், குழந்தைக்கு உரம் விழுதல் என்று ஒன்று உண்டு, அப்படி உரம் விழுந்தால் அதைக் கண்டு பிடிக்க காதைத் தொட்டால் போதும், குழந்தை இன்னமும் அதிகமாக வீறிடும், அப்படிக் கண்டு பிடித்தால் இப்படிப் படுக்கை விரிப்பை உபயோகித்து செய்தால் குழந்தைக்கு உரம் விழுந்திருப்பது நீங்கும்.
4. ஒரு முறை என் நண்பர் உணவு விடுதியில் அவருக்குப் பிடித்தமான பிரியாணியை ஒரு வெட்டு வெட்டிவிட்டு செரிமானம் ஆகாமல் அவதிப்பட்டார். அவரிடம் கொஞ்சம் புளி, கொஞ்சம் சீரகம் இரண்டையும் கலந்து வாயில் போட்டு மெல்லும்படி சொன்னேன் சில நிமிடங்களில் அவர் அஜீரணத்திலிருந்து விடுதலை பெற்றார்.
5. ஒரு முறை ஒரு பெண்மணி திடீரென்று ஏதோ பூச்சி கடித்துவிட்டது அதனால் உடம்பெல்லாம் தடிமனாக ஆங்காங்கே வீங்கிவிட்டது என்றார். அவருக்கு ஒரு மலைவாழைப் பழத்தின் உள்ளே பெருங்காயம் வைத்து உண்ணச் சொன்னேன். சில மணித்துளிகளில் அவருடைய வீக்கங்கள் வடிந்தன.
6. சில நேரங்களில் குழந்தைகள் எதற்காக அழுகின்றன என்றே தெரியாமல் அழுது கொண்டே இருக்கும். எதையோ பார்த்து பயந்தது போல் மிரண்டு மிரண்டு அழும். அப்படிப்பட்ட நேரங்களில் கொஞ்சம் திரு நீறை எடுத்து மன சுத்தியுடன், “ஓம், ஹரீம், ஸ்ரீம், க்லீம், ஜம், மனசா தேவ்யை நமஹ: ” என்னும் ஸ்லோகத்தை ஜரத்காரு தேவியியை நினைத்து ஜபித்துவிட்டுக் குழந்தையின் நெற்றியில் பூசினால் உடனே குழந்தை அழுகையை நிறுத்தும். அல்லது வயிற்று வலியால் அழுதால் ஒரு வெற்றிலையில் கொஞ்சம் விளக்கெண்ணெய் தடவி அதை அடுப்பிலே காட்டி இளஞ்சூடாக வயிற்றில் போட்டுப் போட்டு எடுத்தால் வயிற்று வலி நீங்கிப் புன்னகை பூக்கும் குழந்தை.
7. முகத்திலோ மற்ற ஏதேனும் உடல் அவயவங்களில் காயம் ஏற்பட்டு அந்தக் காயத்தின் விளைவாகக் கரும் வடு ஏற்பட்டால் மஞ்சளையும் தேங்காய் எண்ணையையும் கலந்து பூசி வந்தால் அந்தக் கரும் வடு மறைந்து மீண்டும் சருமம் பளிச்சிடும்.
8. பொதுவாக மாம்பழக் காலங்களில் மாம்பழம் சாப்பிட்டதன் விளைவாக வரும் வயிற்றுப் போக்கை நிறுத்த அந்த மாம்பழத்தின் கொட்டையில் இருக்கும் மாம்பருப்பை எடுத்து அடுப்பிலே சுட்டு, அந்தப் பருப்பை உண்டால் வயிற்றுப் போக்கு நிற்கும்.
9. நம் உடல் உஷ்ணத்தினால் பாதிக்கப்பட்டு வரும் வயிற்று வலியை நீக்க ஒரு கைப்பிடி வெந்தயத்தை எடுத்துக்கொண்டு அதை அப்பிடியே வாயில் போட்டுக் கடிக்காமல் முழுங்கி விட்டு, அதை முழுங்க உதவியாக ஒரு டம்ளர் மோரைக் குடித்தால் உஷ்ணம் குறைந்து உடனே வயிற்று வலி நிற்கும்.
10. ப்ரயாண காலங்களில் வெய்யிலில் ப்ரயாணம் செய்யும்போது வெய்யிலின் பாதிப்பு இல்லாமல் இருக்க எலுமிச்சம் பழத்தை வைத்துக்கொண்டு அவ்வப்போது அதைப் பிழிந்து சாறு எடுத்து அதனுடன் சர்க்கரையை அல்லது சிறிதளவு உப்பைக் கலந்து நீரும் கலந்து குடித்துக்கொண்டே இருந்தால் ப்ரயாணக் களைப்பும் தீரும், உடல் சூடும் சமனப்படும்.
11. குளிர் ப்ரதேசங்களில் பயணப்படும்போது சற்றே இஞ்சி கலந்த சீரகத்தையும், சில மிளகுகளையும் கலந்து இடித்து வைத்துக்கொண்டால் அதனுடன் வெல்லம் கலந்தோ அல்லது சர்க்கரை கலந்தோ பானம் தயாரித்துக் குடித்தால் குளிர் நிற்கும்.
12. ஜலதோஷத்தினாலோ, அல்லது தொண்டைப் புண் ஏற்பட்டு தொண்டைக் கரகரப்பு ஏற்பட்டால் கொஞ்சம் சுண்ணாம்பை தேங்காய் என்ண்ணையுடன் கலந்து தொண்டைப் பகுதியில் தடவினால் விரைவில் குணமாகும்.
அன்புடன் தமிழ்த்தேனீ
Designed and maintained by AKR Consultants

