- காந்திஜி கீழே இறங்கி வாரீர்
Courtesy: vishalam raman
கங்கை ஆற்றின் நடுவில் நின்றபடி கடும் தவம் செய்கிறேன், என் வாய் சிவாய நம: என்றபடி இருக்கிறது. இப்படிப்பட்ட தவம் ஏன் செய்கிறேன், பசி தாகம் இல்லாமல்? ஒரு நப்பாசை தான். ஆம் எனக்கு காந்திஜியைப் பார்த்துப் பேச வேண்டும் என்ற ஆவல்தான்.
சிவபெருமான் உடனே வந்து விட்டார். அவருக்குத் தெரியும் எனக்கு "சைனஸ்" என்று. ரொம்ப நேரம் தண்ணீரில் இருந்தால் ஒத்துக்கொள்ளாது என்பது அவருக்குத்தெரிந்து ஓடி வந்தார்.
"பெண்மணியே, இப்படிக் கடும் தவம் செய்து என்னை அழைத்தது எதற்கு?
கலியுகத்தில் நாமஸ்மரணைக்கு இத்தனை சக்தி உண்டு என எனக்குத் தெரியும், ஆனாலும் நான் இத்தனை எளிதாக இந்த நிலையை அடைய முடியும் என அப்போது தான் உணர்ந்தேன். என் இரு கரங்களையும் கூப்பி, "பரமேஸ்வரா, எனக்கு காந்திஜியைப் பார்க்க வேண்டும். பின் திரு லால்பஹாதுர் சாஸ்த்ரிஜி, லோகமான்ய திலக்ஜி, வினோபாபாவே ஜி, கட்டபொம்மன் ஜி"
"என்ன ஒரே ஜி ஆக இருக்கிறது? டூ ஜி என்றும் ஒன்று கேள்விப்பட்டேனே. அதனால் வந்த விளைவோ இது?"
"பரமேஸ்வரா, எல்லாம் தெரிந்தும் என்னை இப்படி வம்புக்கு இழுக்கிறீர்களே!"
"சரி உன் இந்த உடலுடன் எப்படி அவர்களைப் பார்ப்பாய்? தவிர ஏன் பார்க்க வேண்டும்?'
"அதற்குத்தான் தவம் செய்தேன். தாங்கள் ஒரு வரம் கொடுக்க வேண்டும். ஒரு மணி நேரத்திற்கு அவர்கள் இருக்கும் இடத்திற்கு அழைத்துச் செல்லுங்கள். பின் நான் திரும்ப என் வீடு சென்றுவிடுகிறேன்."
"அப்படி என்ன அவசரமோ?"
"அவசரம் தான், குடியரசுதினம் வருகிறது, காந்திஜியைக் கூப்பிட்டு நாட்டின் நிலைமையைப் பற்றிச் சொல்ல வேண்டும்."
"அப்படியே செய்கிறேன், உன்னைப் பார்க்கப் பரிதாபமாக இருக்கிறது."
சிவன் என்னை அழைத்துச் செல்ல ஏரோப்ளேன் போல் என் உடம்பும் பறந்து செல்கிறது.
இதோ வந்துவிட்டது ஒரு லோகம். உள்ளே நுழையும் போதே ஒரு டென்சன் இல்லை, அமைதிப்பூங்காவாக இருக்கிறது, ஆனால் சங்கமம் விழா நடக்கவில்லை.
இதோ என் எதிரே பாபூஜி அமர்ந்திருக்கிறார். அன்று பார்த்தமாதிரியே இருக்கிறார், இடுப்பில் ஒரு சின்ன வேஷ்டி. என்னைப் பார்த்துப் புன்முறுவலிக்கிறார். என்ன, இந்திய மக்கள் எல்லோரும் நலம்தானே?"
"மிகவும் நலம்தான், எல்லோரும் மிகவும் விசுவாசமாகவும் இருக்கிறார்கள்."
"அப்படியா! எதை வைத்து நீங்கள் அப்படிச் சொல்கிறீர்கள்?
"தேர்தலின் போது மக்கள் இலவசமாக சில பொருட்களை வாங்கிக்கொள்கிறார்கள். பேராசை யாரை விட்டது! பின் நல்ல சாப்பாடும் அளவுக்கு மேலாக தக்ஷிணையும் பெற்றுக்கொண்டு வாழ்த்தி ஓட்டும் அளிக்கிறார்கள். தேர்தலில் நல்லவனோ அல்லது கெட்டவனோ யார் நின்றாலும் கவலையில்லை. அன்னம் இட்டவனுக்குத் துரோகம் எப்படிச் செய்ய முடியும்?
காந்திஜியும் அருகில் இருந்த ஸ்ரீலால்பஹாதுர் சாஸ்திரியும் முகம் சுளுக்கின்றனர்.
"இன்னும் கேளுங்கள் தேசப்பிதாவே, மக்களிடம் பொறுமை குணம் அதிகரித்திருக்கிறது. நாட்டில் கோடிக்கோடியாக ஊழல் நடந்தாலும் அவர்கள் மிகப்பொறுமையாகப் போய்க்கொண்டிருக்கிறார்கள், மக்கள் என்ன! நம் பிரதம மந்திரியும் மிகப்பொறுமையுடன் எல்லாம் பார்த்துக்கொண்டிருக்கிறார்."
"கோர்ட்டு, நீதி எல்லாம் உண்டே, அத்துடன் சிபிஐ என்ற அமைப்பும் உண்டே?" தன் வழுக்கத்தலையைத் தடவிக்கொள்கிறார் பாபூஜி.
"அதை ஏன் கேட்கிறீர்கள்? அதை வெளிப்படையாக எனக்குச் சொல்ல முடியாது நீங்களே நம் நாட்டிற்கு வந்து பாருங்கள்.
"சரி பொருளாதார நிலைமை எப்படி?'
"அதுவா? பாமர மனிதன் விலைவாசி பாரம் தாங்க முடியாமல் டென்சனைக் கழுதை போல் சுமக்கிறான், ஆனால் மந்திரிகள் கோடியாதிபதியாக ஆகிவிட்டனர். பல வீடுகள் பல நிலங்கள் என்று பஹுத் படியா badhiya தான்.
லால் ப்ஹாதூர் ஜி தன் கண்களைத் துடைத்துக்கொள்கிறார், பின்ன மாட்டாரா என்ன? ரயில் மந்திரியாக இருக்கும் போது தானும் சாதாரண மக்களைப்போல் ரயிலில் பிரயாணம் செய்தவராயிற்றே. அவருக்கென்று ஒரு சின்ன குடிசை கூட கடைசி வரை கட்டிக்கொள்ளவில்லையாம்.
"சரி, மக்களுக்காக மக்களால் மக்களுடைய ஆட்சி தானே குடியரசு. அங்கு ஏன் இப்படியெல்லாம் நடக்கிறது?" லால்பஹாதுர் கேட்கிறார்.
"ஆம் சாஸ்திரிஜி, இப்ப நிலைமை மாறி லஞ்சத்தால் லஞ்சத்திற்காக் லஞ்சத்தினுடைய ஆட்சி நடைப்பெறுகிறது. பிறர் நலம் என்ற சொல்லே மறந்து விட்டது. எல்லாம் தன்னலம், தன் குடும்ப நலம் என்று வந்துவிட்டது. என்ன செய்வது? அதுதான் அவசரமாகத் தவம் இருந்து சிவனின் அருளால் உங்களைப் பார்க்க வந்திருக்கிறேன். ஒரு மணி நேரம் தான் எனக்கு அவகாசம், இதோ முடியப்போகிறது.
"கவலைப்படாதீர்கள், சத்யமேவ ஜயதே!"
"எல்லோரும் பசுப்போல் முகமூடி வைத்திருக்க நிஜமாக பசுவா அல்லது குள்ள நரியா, அல்லது புலியா என்று தெரியவில்லை. இந்தப் பூனையும் பால் குடிக்குமா என்று இருக்க நம்ப முடியாத செயல்கள் நடப்பதைப் பார்த்து மக்கள் வேதனையுடன் திகைத்து நிற்கின்றனர். பாபூஜி, அசத்யமேவ ஜயதே என்ற நிலைமை மாறி நீங்கள் சொல்வது போல் சத்தியம் ஜயிக்க வேண்டும். அப்போதுதான் நாடு அமைதி காணும். நீங்கள் மிக விரைவாக நம் நாட்டிற்கு வர வேண்டும்."
"ஹே ராம்! ஹேராம்! நான் இங்கு மிகவும் பரமானந்தமாக இருக்கிறேன் தர்மம வெல்லும்."
தன் கைகளைத் தூக்கி ஆசீர்வதிக்கிறார், நானும் தலையைக் குனிந்து வணங்குகிறேன்."
"என்ன இன்னிக்குப் பஜன் கிளாஸ் இல்லையா? மணி 7 ஆகிவிட்டது."
என் கணவர் குரல் கேட்டு வாரிச் சுருட்டிக்கொண்டு படுக்கையிலிருந்து எழுந்தேன். காந்திஜி மறைந்து போனார்.
குடியரசு தின வாழ்த்துக்கள்!
Designed and maintained by AKR Consultants

