- நல்ல நாளாக அமையட்டும்
Courtesy: K.Thyagarajan, chennai
நல்ல நாளாக அமையட்டும் - காஞ்சிப்பெரியவர்
* காலையில் எழுந்தவுடன் இரண்டு நிமிடமாவது கடவுளை மனதில் நினைத்து பிரார்த்தனை செய்யுங்கள். அன்றைய நாள் நல்ல நாளாக அமையவேண்டும் என்று வேண்டிக் கொள்ளுங்கள்.
* புண்ணிய நதிகள், கோமாதா, சிரஞ்சீவிகள், மகான்கள் முதலியோர்களை ஒரு நிமிட நேரமாவது பக்தியோடு நினைப்பது அவசியம்.
* வாரம் ஒரு முறையாவது வீட்டுக்கு அருகிலுள்ள கோயிலுக்குச் சென்று வழிபாடு செய்வது நல்லது.
* அக்கம் பக்கத்து வீட்டினரையும் உறவினர் போல நேசிக்க வேண்டும். சாப்பிடும் முன் மிருகங்களுக்கோ, பறவைகளுக்கோ சிறிது அளவு உணவிட்ட பிறகே சாப்பிடுங்கள்.
* தூங்கும் முன் அன்று நாம் செய்த செயல்களை சிறிது நேரம் மனதில் சிந்திக்க வேண்டும். நன்மையைச் செய்தால் அதுபோல் மேலும் பல நன்மைகளைச் செய்யும் வாய்ப்பை இறைவனிடம் வேண்டிக் கொள்ள வேண்டும். தீமையைச் செய்தவர்கள் இனிமேலாவது செய்யாமல் இருக்கும் மனவுறுதியைப் பெற முயற்சிக்க வேண்டும்.
* இஷ்ட தெய்வத்தின் நாமத்தை அன்றாடம் 108 முறையாவது ஜபித்து வருதல் வேண்டும். இதனால், மனத்தூய்மை உண்டாகும்.
அமைதியும் ஆனந்தமும் - சத்குரு ஜக்கி வாசுதவ்!
* மகிழ்ச்சியாக இருக்கும் போது, உங்களைச் சுற்றியுள்ள மனிதர்களுக்கு நீங்கள் அற்புதமான மனிதர் தான். ஆனால், மகிழ்ச்சியின்றி இருக்கும்போது, இந்த உலகுக்கு நீங்கள் ஒரு ஆபத்தான மனிதர். நமது மனநிலை நாம் இருக்கும் சூழ்நிலையை வெகுவாகப் பாதிக்கிறது.
* உங்கள் வாழ்வின் மிக அழகான தருணங்கள் நீங்கள் மகிழ்ச்சியைத் தேடிக் கொண்டு இருந்த கணங்கள் அல்ல. நீங்கள் மனமகிழ்ச்சியை வெளிப்படுத்திய நல்ல தருணங்களே.
* அமைதியும் ஆனந்தமும் வாழ்வின் உச்சக்கட்ட நிலை அல்ல. அவை வாழ்வின் தொடக்கமே. அன்பு என்பது வெறும் பேச்சளவில் இருக்கக் கூடாது. அது செயல் வடிவம் பெற வேண்டும். மற்றவர்களுக்காக பொறுப்பேற்றுக் கொள்வது தான் உண்மையான அன்பின் அடையாளம் ஆகும். முழுமையான பொறுப்புணர்வில் தான் மனிதன் அற்புதமான அனுபவங்களைப் பெறுகிறான்.
உறவுகள் மேம்பட - தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி
* நானே பெரியவன், நானே சிறந்தவன் என்ற அகந்தையை விடுங்கள்.
* அர்த்தமில்லாமலும், பின்விளைவு அறியாமலும் பேசிக் கொண்டேயிருப்பதை விடுங்கள்.
* எந்த விஷயத்தைம் பிரச்சனையையும் நாசூக்காக கையாளுங்கள், விட்டுக்கொடுங்கள்.
* சில நேரங்களில் சில சங்கடங்களைச் சகித்துத்தான் ஆக வேண்டும் என்று உணருங்கள்.
* நீங்கள் சொன்னதே சரி, செய்ததே சரி என்று வாதாடாதீர்கள், குறுகிய மனப்பான்மையை விட்டொழியுங்கள்.
* உண்மை எது, பொய் எது என்று விசாரிக்காமல் இங்கே கேட்டதை அங்கே சொல்வதையும், அங்கே கேட்டதை இங்கே சொல்வதையும் விடுங்கள்.
* மற்றவர்களைவிட உங்களையே எப்போதும் உயர்த்தி நினைத்து கர்வப்படாதீர்கள்.
* அளவுக்கதிகமாய், தேவைக்கதிகமாய் ஆசைப்படாதீர்கள்.
* எல்லோரிடத்திலும் எல்லா விஷயங்களையும், அவர்களுக்குச் சம்பந்தம் உண்டோ இல்லையோ, சொல்லிக் கொண்டிருக்காதீர்கள்.
* கேள்விப்படுகிற எல்லா விஷயங்களையும் நம்பி விடாதீர்கள்.
* அற்ப விஷயங்களைப் பெரிது படுத்தாதீர்கள்.
* உங்கள் கருத்துக்களில் உடும்புப் பிடியாய் இல்லாமல், கொஞ்சம் தளர்த்திக் கொள்ளுங்கள்.
மற்றவர்களுக்கு உரிய மரியாதை காட்டவும், இனிய இதமான சொற்களைப் பயன்படுத்தவும் தவறாதீர்கள்.
* புன்முறுவல் காட்டவும், சிற்சில அன்புச் சொற்களைச் சொல்லவும் கூட நேரமில்லாதது போல் நடந்து கொள்ளாதீர்கள்.
* பேச்சிலும், நடத்தையிலும் பண்பில்லாத வார்த்தைகளையும், தேவையில்லாத மிடுக்கையும் காட்டுவதைத் தவிர்த்து அடக்த்தையும், பண்பையும் காட்டுங்கள்.
* அவ்வப்போது நேரில் சந்தித்து மனம் திறந்து பேசுங்கள்.
* பிரச்சனைகள் ஏற்படும்போது, அடுத்தவர் முதலில் இறங்கி வர வேண்டும் என்று காத்திருக்காமல், நீங்களே சென்று பேச்சைத் துவக்க முன்வாருங்கள்.
Designed and maintained by AKR Consultants

