- What an individual can achieve
If he has COMMITTMENT
Courtesy: SS.Mani, Kalakad
திரு கலாம் மனமகிழ ஒரு செய்தி - SPR
பொது கழிவறையின் பின்னணியில் ஒரு நிஜ கதாநாயகன்
சென்னை:
காற்றில் மெலிதாகப் பரவும் பாடல்; அறை முழுவதும் சுகந்தம்; பக்கத்து அறையில் விபூதி சந்தனத்துடன் சிரிக்கும் யானை முகத்தான்; முகத்தில் சின்னப்புள்ளி கூடத் தெரியும் அளவிற்கு, கண்ணாடியில் தெளிவு; நடப்பதற்கு சிவப்புக் கம்பளம்; துடைப்பதற்குத் துண்டு; இப்படி ஒரு பொதுக் கழிவறையை இந்தியாவில், கனவில் கூட நினைத்துப் பார்க்க முடியுமா? சென்னை ஐகோர்ட், காசிமேடு பகுதிகளில் இதனை சாத்தியத்தியபடுத்தியிருக்கிறார், இளைஞரான வெங்கடேஷ்வரலு மாதிகா. "என்னோட அம்மாவும் அப்பாவும், மனிதக் கழிவுகளைத் தோளில் சுமந்து, என்ன படிக்க வச்சாங்க. அவங்களோட கஷ்டம், எனக்கு நல்லாத் தெரியும். அது போல சென்னையில மட்டும், துப்புரவு வேலை செய்கிற, 10 லட்சம் ஆதி ஆந்திர மக்கள் இருக்காங்க. அவங்க வாழ்க்கை முன்னேற்றம் அடைய, அவங்க வேலை செய்கிற, அதே கழிவறை மூலமாக போராடிக் கொண்டிருக்கிறேன்'' நம்பிக்கையுடன் சொல்கிற வெங்கடேஷ்வரலு மாத்திகா, ஆதி ஆந்திர இளைஞர் சங்கத்தின் தலைவர்.
காலம் காலமாக, பழைய நெளிந்த குவளை, உள்ளே நுழைந்தாலே குமட்டல் எடுக்கும் அளவிற்கு துர்நாற்றம், சுத்தம் செய்யப்படாத கழிப்பறைகள் என, பெரும் நோய் தொற்றும் கூடமாக, மாநகராட்சிப் பொதுக் கழிவறைகள் இருக்க, மேற்கத்திய தரத்தில் கழிப்பறையை பராமரித்து வருகிறார் இவர். காசிமேடு, ஐகோர்ட், போன்ற இடங்களில் இவர் பராமரித்து வரும் கழிவறைகளை, சென்னையில் இருக்கும் பொதுக் கழிவறைகளில், "நம்பர் ஒன்' என்று, தயங்காமல் சொல்லலாம். சிறுநீர்க் கழிக்க ஒரு ரூபாய். மற்றவற்றுக்கு 2 ரூபாய். "ஐகோர்ட் வந்த கடலூர் நீதிபதி, எங்கள் கழிவறையைப் பயன்படுத்தியவுடன் ஆச்சர்யப்பட்டார். பின்னர் கடலூர் கோர்ட்டுக்கு வந்து, கழிவறைகளைப் பராமரிக்கும் கான்ட்ராக்ட்டை பெற்றுக் கொள்ளச் சொன்னார்'' என்கிற வெங்கடேஷ் மாத்திகா.
தாங்கள் பணி செய்யும் இடத்தை கோவிலுக்குச் சமமாகக் கருதுகிறார். அதனால் தான் தாங்கள் பராமரிக்கும் ஆண்கள், பெண்கள் கழிவறைகளுக்கு மத்தியில் உள்ள அறையில், சாமி படம் வைத்து வழிபட்டு வருவதாகச் சொல்கிறார்.
இந்த பணியுடன், சென்னையிலிருக்கும், 10 லட்சம் துப்புரவுப் பணியாளர்களில் பெரும்பாலானோர், போதைப் பழக்கங்களுக்கு அடிமைகளாகி விட்டதால், அவர்களை அந்த பழக்கங்களிலிருந்து மீட்டெடுக்கவும், அவர்களின் குழந்தைகள் கல்வி பெறவும் போராடி வருகிறார்.காலையிலேயே வேலைகளுக்குச் சென்று விடுவதால், துப்புரவு பணியாளர்கள், தங்கள் குழந்தைகளின் படிப்பில், கவனம் செலுத்துவதில்லை. அதனால், அக்குழந்தைகளைக் கவனிப்பதற்கு தனிக்குழுவை வைத்திருக்கிறார். இதன் மூலம், இக்குழந்தைகளுக்கு கல்வி வசதி கிடைத்திட, வழி செய்திருக்கிறார்.
இன்றையச் சூழலில், துப்புரவுத் தொழிலாளர்களுக்கு, சரியான ஊதியமும், அங்கீகாரமும் கிடைக்கவில்லை என்று ஆதங்கப்படுகிற வெங்கடேஷ்வரலு, "போன் செய்தால், வீடு தேடி வந்து சுத்தம் செய்து கொடுக்கிற' திட்டமும் வைத்திருக்கிறார். மேலும், சென்னை மாநகராட்சியில், ஒப்பந்த அடிப்படையில், 25 தானியங்கி குப்பை சேகரிக்கும் வாகனங்களை, நான்கு மண்டலங்களில் இயக்கி வருகிறார்.வீணாகும் மனித திடக்கழிவு மூலம், பயோகேஸ் தயாரிப்பதற்கும், அதன் மூலம், ஆதி ஆந்திர பெண்களுக்கு, வேலைவாய்ப்புக் கிடைப்பதற்கும், பல திட்டங்கள் வைத்திருக்கிறார். இதன் மூலம், மின்சாரத் தட்டுப்பாட்டை ஓரளவிற்கு சரிசெய்ய முடியும். மேலும், இயற்கை உரம் தயாரிப்பதால், செயற்கை உரங்களுக்கு வேலை இல்லாமல் போகும் என்பது இவரின் கருத்து .
சென்னையைச் சுத்தம் செய்ய, பன்னாட்டு நிறுவனங்களோடு, மாநகராட்சி ஒப்பந்தம் போட்டாலும், இங்கு இருக்கும் ஆதி ஆந்திர மக்களைத் தான் பயன்படுத்தி வருகிறது. இதனால், அரசு வேலை உத்தரவாதம் கூட, இம்மக்களுக்குக் கிடைப்பதில்லை. ஒப்பந்த ஊழியர்களாக காலம் முழுக்க இருப்பதால், தினமும் வேலையை நோக்கியே இவர்களின் பயணம் இருக்கின்றன. தனியார் நிறுவனங்களில், இம்மக்களின் உயிருக்கு உத்தரவாதம் இல்லாதச் சூழல் இருக்கிறது என, வேதனை தொனிக்கச் சொல்கிற வெங்கடேஷ்வரலு, சென்னையில் இருக்கும் பல்வேறு மாற்றுத் திறனாளிகளின் காப்பகங்களுக்கு, வாரம் ஒரு முறை, தன் குழுவினருடன் சென்று சுத்தப்படுத்தும் பணியையும் பெருமையோடு செய்து வருகிறார்.
அன்புடன் செபரா
Designed and maintained by AKR Consultants

