- வரலக்ஷ்மி வருகிறாள்.என் வீட்டிற்கு
Vishalam Raman
Courtesy:
நாளை ஒரு நாள் காத்திருத்தல் வேண்டும். அடுத்த நாள் என் வரலட்சுமி வந்துவிடுவாள். என்னுடன் இரண்டு நாட்கள் இருப்பாள். தொடர்ந்து 46 வருடங்களாக வந்தபடி இருக்கிறாள். இந்த ஆவணி பௌர்ணமியன்று வந்துவிடுவாள். அவள் வருவதற்கு முந்திய நாள்தான் எனக்குள் என்ன பரபரப்பு, எத்தனை வேலை! .ஒவ்வொரு வினாடியும் அவளேதான் என் நினைப்பு.
"அம்மா வரலட்சுமி, நீ நல்லபடிக்கு வந்து நல்லபடியாய் எல்லாம் நன்னா நடத்திக் கொடுக்கணும். உனக்காக நான் ஒன்னு கூடக் குறைக்க மாட்டேன். என் உடம்பு முடிலேன்னாலும் எப்படியோ மனோபலத்தில் செஞ்சுடுவேன். நீ வரதுன்னா சும்மாவா? எத்தனை வருஷ பந்தம் இது!"
வரலட்சுமி வரும் நாள் எனக்கும் நிறைய "வேண்டும்' என்ற சொல் வந்துவிடும். நிறைய பணம் வேண்டும் என்றா நினைக்கிறீர்கள்? அந்த "வேண்டும்" இல்லை இது.. என்னன்ன ரெடி செய்ய வேண்டும் என்பதுதான்.
ஒரு மண்டபம் தயாரிக்க வேண்டும். 2 வாழைக்கன்றுகளை ஜாக்கிரதையாக மண்டபத்தின் முன் கட்ட வேண்டும். பச்சரிசியை நனைத்துப் பின் அதை நைசாக அரைத்து மாக்கோலம் போட வேண்டும். இட்லிக்கு அரைக்க வேண்டும். மறு நாள் வடை பாயசம் சுண்டல் எல்லாம் செய்ய வேண்டும். வெல்லக் குழக்கட்டைக்குத் தேங்காய் துருவி வைத்துக் கொள்ள வேண்டும். நுனி இலை தயார் செய்து அதில் பச்சரிசி பரப்ப வேண்டும். இரு பக்கம் எலுமிச்சம் பழமும் வைக்க வேண்டும்.
பூஜை செய்ய மரப்பலகையும் அமருவதற்குப் பலகையும் நன்கு துடைத்து வைக்க வேண்டும். பீரோவில் இதுநாள் வரை ஓய்வு எடுத்துக்கொண்ட வரல்ட்சுமி முகம் எடுத்து மெல்லத் துடைத்து வைக்க வேண்டும். கலசத்திற்குள் போடும் சாமான்களையும் ஞாபகமாக் வைக்க வேண்டும். வாத்தியாரிடமிருந்து மஞ்சள் சரடுகள் வாங்கிவர வேண்டும். பூஜைக்கு வேண்டிய வெள்ளிப் பாத்திரங்கள், பஞ்சாத்திரம் உத்தரணி, குத்துவிளக்கும் நன்கு சுத்தப்படுத்தி வைக்க வேண்டும். வெற்றிலை, பாக்கு, மஞ்சள், குங்குமம் எல்லாம் ரெடியாக இருக்கிறதா என்று பார்க்க வேண்டும்.
அம்மன் ஆர்த்தி பாட்டுப் புத்தகத்தைத் தேடி வைக்க வேண்டும். பாடும் போது மறந்துவிட்டால் என்ன செய்வது? விதிப்படி பூஜை செய்யும் புத்தகமோ அல்லது கேசட்டோ எடுத்து வைக்க வேண்டும்.
வரலட்சுமி முகத்தை அமர்த்த கலசம் த்யார் செய்ய வேண்டும். பின் தேங்காயைக் குடுமியுடன் அதில் வைத்து மாவிலைகளை சுற்றிச்சொருக வேண்டும்.
எல்லாவற்றையும் விட சுவற்றில் அம்மனின் சித்திரம் கலசம் மேல் இருப்பது போல் வரைந்து அருகில் குத்துவிளக்கு, தட்டில் பழங்கள் எல்லாம் வரைய வேண்டும். காவியை நீரில் குழைத்து பின் சின்னக் குச்சியால் தோய்த்து அம்மனை வரைய, மனதிலே அத்தனை ஆனந்தம் பிறக்கும். இதைத்தவிர மின்சார மின்னும் விளக்குகள் கண்சிமிட்டுவது போல் அணைந்து அணைந்து எரியும் போது என் வரலட்சுமியின் அழகு சொல்ல முடியாது, அத்தனை ஜ்வலிப்பாள்.
அம்மனின் பூஜையையும் அவள் ஒய்யாரமாக அமர்ந்திருப்பதையும் காணப் பெண்கள் வேண்டுமே. திருமணத்ததிற்கு அழைப்பது போல் பெண்மணிகளை அழைக்க வேண்டும் டெலிபோனில் அழைப்பு விடுக்க வேண்டும்.
மறுநாள் பூக்களின் கோபுரத்தின் நடுவில் தாமரைப்பூக்கள் இருபுறமும் அலங்கரிக்க, தாழம்பு வாசனை தூக்க அந்த மந்தஹாஸ வதனியைப்பார்க்கும் போது இடுப்பு வலியுடன் முதல் நாள் செய்த வேலைகளெல்லாம் மறந்துவிடும், மனம் முழுவதும் அம்பாளே அமர்ந்திருப்பாள். அதை அனுபவித்தால் தான் தெரியும். லலிதா சஹஸ்ரநாமம, லலிதா திரிசதி என்று சொன்ன பின் "ஸ்ரீவரலட்சுமி நமஸ்துப்யம்" என்ற தீக்ஷதர் கிருதியைப் பாடியோ அல்லது கேட்டபடி அம்பாளின் முகத்தைப் பார்த்தபடி இருக்க நான் நானாகவே இருப்பதில்லை. இத்தனைக் கஷ்டங்களும் கஷ்டமாகவே தெரியாமல் மனதுக்குள் ஒரு ஆனந்தம் கிடைக்கிறதே அதற்கு ஈடு ஏதுமில்லை.
வரலக்ஷ்மி ராவேமாயண்டிகி ...ஸ்ரீராஜபுத்ரி.......
இத்தனையும் எங்கள் வீட்டிலும் செய்வோம். மங்களகரமா இருக்கும்.
வரலக்ஷ்மி ராவேமாயண்டிகி .. இந்த பாட்டை எங்க அம்மா பாடுவாங்க அருமையா இருக்கும்.
Designed and maintained by AKR Consultants

