- இன்பம் எங்கே?
நடராஜன் கல்பட்டு
Courtesy: நடராஜன் கல்பட்டு
ஒலி எழுப்பினேன் பதிலில்லை
காரில் இருந்து இறங்கியே
கதவை அடைந்துத் தட்டினேன் அதை
தீன சுரத்தில் ஒரு பெண் குரல்
‘ஒரு நிமிடம்’ என்றே எதையோ தரையில்
இழுக்கும் சத்தம் விழுந்தது என் காதில்
நீண்டதோர் இடைவெளி
மெல்லத் திறந்தது கதவு அதன் பின்
நின்றதோர் மெலிந்த உருவம்
வயதிருக்கும் தொண்ணூறு
வலுவில்லை உடலிலே
அணிந்திருந்தோ ஆதிநாள் ஆடை
கையிலோர் சிறிய பெட்டி
கயிறு கட்டி இழுத்த நிலையில்
‘வைத்திடுவாயா இதை வண்டியில்?’ என்றாள்
கைப் பெட்டி எடுத்தே காரில் வைத்திட்டேன்
அவள் கை பிடித்து மெல்ல ஏற்றினேன் வண்டியில்
கதவினைப் பூட்டித் தந்தேன் அவளிடம் சாவியை
‘எங்கு செல்ல வேண்டும்?’ என்று நான் கேட்க
காகிதத் துண்டொன்றை நீட்டினாள் என் முன்னே
‘குறுக்கு வழியில் சென்றால் அடைந்திடலாம்
அங்கு பத்தே நிமிஷத்தில்’ என்று நான் சொல்ல
‘வேண்டாம் ஊருக்குள் பல இடங்கள் பார்க்க வேண்டும்
கடைசியாய் ஒரு முறை நான் முதலில்
செல் மேட்டுத் தெரு’ என்றாள்.
அங்கோர் பழைய வீடு
காரை நிறுத்து ஒரு கணம்
‘நான் பிறந்து வளர்ந்த வீடிது
ஓடி ஆடிய நாட்கள் பல உண்டு இங்கு’
என்றவள் சொன்ன போது
மாறினாள் அவள் பச்சிளங் குழந்தையாய்
‘அடுத்து செல் ஆலிவர் பூங்கா
அங்குதான் சந்தித்தேன் அவரை முதன் முதலாய்’
பூங்காவினுள் சென்றதும் கண்களை மூடியே
மூச்சினை இழுத்தாள் பலமாய் ஒரு முறை
மூடிய அவள் கண்கள் கண்டனவோ அவரை
இழுத்த மூச்சினில் இருந்ததோ அவர் வாசம்
பூங்காவை விட்டு வெளி வந்தோம்
‘அடுத்தது எங்கே?’ என நான் கேட்கு முன்
அவள் கையைக் காட்டினாள் கடைத்தெருப் பக்கம்
கடைத் தெருவிலோர் பெரிய கட்டிடம்
‘காரை நிறுத்து ஒரு கணம்’ என்றவள் சொல்ல
நிறுத்தினேன் காரை கடை முன்னே
‘இங்குதான் வாழ்ந்தேன் அவருடன் அறுபது ஆண்டுகள்
இன்றோடாகிறது பத்தாண்டுகள் அவர் போய்’
நீண்டதோர் பெரு மூச்சு மூடிய கண்களோடு
கண்களை மூடினால் தெரிகிறதோ காட்சிகள்?
‘இனி போகலாம்’ என்றவள் சொல்ல
சென்றடைந்தேன் சேர வேண்டிய இடம்
வெளி வாயில் கதவின் மேல்
அரை வட்ட வடிவில் ஓர் வாசகம்
அன்னை முதியோர் இல்லம்
வெளிக் கதவைத் திறந்து காரை
உள்ளே ஓட்டிச் சென்றேன்
‘கதவைத் தட்டு’ என்றாள் அவள்
தட்டத் திறந்தது கதவு, வெளி வந்தனர் இரு பெண்கள்
அவர்களுடன் சக்கர நாற்காலியுந்தான்
மெல்லக் கைத் தாங்கலாய்ப் பிடித்து
இறக்கினோம் என் பயணியை
நாற்காலியில் உட்கார்ந்த அவள் கேட்டாள்
‘வண்டி வாடகை எவ்வளவு தர வேண்டும்?’ என
‘ஒன்றுமில்லை’ என்றே நான் சொல்ல
‘ஒன்று மில்லையா? ஊரைச் சுற்றி
ஓட்டி வந்தாயே?’ என்றவள் கேட்க
‘அம்மா நீங்கள் வாழ்ந்த இடங்களைப் பார்த்த போது
அடைந்தீர்களே இன்பம் அதுவே
எனக்கு இன்று கிடைத்த
விலை மதிப்பற்ற ஊதியம்’ என்றேன் நான்
‘பல்லாண்டு காலம் வளமுடன்
வாழ்ந்திடல் வேண்டும் மகனே நீ’
என்றவள் வாழ்த்தி மறைந்தாள் கட்டிடத்தின் உள்ளே
நேராக வீடு திரும்பினேன் வேறெங்கும் செல்லாமல் நான்
என் மனம் அடைந்த மகிழ்ச்சியை
ஏன் கெடுத்துக் கொள்ள வேண்டும்
வேறொரு ஆளை வண்டியில் ஏற்றி
அவரோடு வாக்கு வாதத்தில் ஈடு பட்டு
இன்பம் எங்கே பிறர் மனம்
குளிரச் செய்வதில் கிடைப்பதே பேரின்பம்
(இன்று வந்த ஒரு ஆங்கில மடலின் தமிழாக்கம் இது)
நடராஜன் கல்பட்டு
Designed and maintained by AKR Consultants

