- நல்லதே நினைப்போம்
- R. Vishalam
எதிர்மறை எண்ணங்கள் ஒருவரை ஆட்கொண்டால் அது நடந்துவிடுகிறது. நம்மைச்சுற்றிப் பல தேவர்கள் போய்க்கொண்டு இருப்பதாகவும் அவர்கள் எப்போதும் ததாஸ்து என்று சொல்வதாகவும், அதனாலேதான் நாம் சொல்வதும் நினைப்பதும் நல்லதாகவே இருக்க வேண்டும் என்றும் பெரியவர்கள் சொல்கிறார்கள். திருமணத்தில் முக்கியமான கட்டத்தில் கெட்டிமேளம் கெட்டிமேளம் என்று சொல்ல, நாதஸ்வர வித்துவான் பீபீ என்று ஊத, தவிலும் சத்தமும் காதைத்துளைக்கும். இந்த நேரத்தில் யாராவது எதிர்மறைச்சொற்கள் எழுப்பினால் அது வெளியே கேட்க்காமல் இருக்கவே இந்த மாதிரி பீபீ டும் டும்.
இந்த எதிர்மறை எண்ணம் அதிகப் பாசத்தினாலும் ஏற்படக்கூடும். தன் மகனோ அல்லது மகளோ மிகவும் நோய்வாய்ப்பட்டுக் கவலைக்கிடமாக இருக்கும் போது, "அப்பா முருகா என்னை வேண்டுமானலும் அழைத்துக்கொள், .என் குழந்தையை விட்டுவிடு, அவன் வாழ்க்கையில் இப்போது தான் நுழைகிறான்" என்று சொல்லும் பெற்றோர்களைப் பார்த்திருக்கிறேன்,
இதைப் பார்க்கும் போது சரித்திரத்திலும் ஒரு சம்பவம் நினைவுக்கு வருகிறது. முகலாய மன்னர் பாபருக்குத் தன் மகன் ஹுமாயூன் மேல் அளவு கிடந்த பாசம், ,அவன் மீது தன் உயிரையே வைத்திருந்தார். ஒரு சமயம் ஹுமாயூனுக்குக் கடும் சுரம் கண்டது, தந்தைக்கு இதைப் பார்க்க முடியவில்லை. பல வைத்தியம் செய்தும் நிலைமை மாறவில்லை. பாபர் துடிதுடித்துப்போனார், என் மகன் பிழைபானா? என்ற கேள்வியைப் பலதடவைகள் கேட்டுக்கொண்டார், அவர் மனதில் என் மகன் பிழைத்து விடுவான் என்ற திடமான எண்ணம் வரவில்லை, ஆனால் பிழைப்பானா என்ற சந்தேகமே வந்தது, வைத்தியர்கள் எல்லோரையும் அனுப்பி விட்டார். மகன் படுத்திருக்கும் கட்டில் அருகில் வந்தார், முழந்தாளிட்டு தியானிக்கும் நிலையில் அமர்ந்தார்,.அந்த இறைச்சக்தியை அழைத்தார், "அல்லா என் மகனுக்கு ஒன்றும் நேரக்கூடாது, அவன் பிழைக்க வேண்டும்," என்று குப்புற விழுந்து கேவிக்கேவி அழுதாராம். பின்னர், "உனக்கு உயிர் தானே வேண்டும்? என் உயிரை எடுத்துக்கொள், என் மகனுக்கு உயிர்பிச்சை தா" என்று வேண்டினார்,
கொஞ்சம் நேரத்தில் ஹுமாயூன் கண்விழித்துப் பார்த்தான், பாபரின் வேண்டுகோளுக்கு இறைவனும் செவி சாய்த்தான், கொஞ்சம் கொஞ்சமாக ஹுமாயூனின் உடல் நிலையில் முனேற்றம் தெரிந்தது. ஆனால் சீக்கிரமே பாபர் நோய்வாய்ப்பட்டார். படுத்தப டுக்கையனார், அவர் கேட்டுக்கொண்டபடியே அவர் உயிரும் பறிக்கப்பட்டது, பாபருக்குத் தன் தாய்நாட்டின் மீது அதிக பக்தி, ஆகையால் அவர் வேண்டுகோளின் படி அவரது உடல் காபூலுக்கு எடுத்துச் செல்லப்பட்டது. காபூலில் பாபரின் சமாதி இன்னும் இருக்கிறது,
எண்ணங்கள் சொல்வதிலும் தெளிவு வேண்டும், என் கால்வலி போகவேண்டும் என்று மனதில் பதிப்பதைவிட என் கால்கள் வலிமையாக இருக்கிறது, என் கால்களால் நான் வெகுதூரம் உற்சாகத்துடன் நடக்கிறேன்" என்பது போல் மனதில் நினைக்க வேண்டும், இதையே சினிமா படம் போல் மனதில் காட்சிகளாகவும் காணலாம், இதுபோல் செய்தால் மனசக்தியின் மூலம் பல சாதனைகள் செய்ய முடியும்,
இதையே நெகடிவ்வாக யோசித்தால் அதுவே நமக்கு வந்துவிடுகிறது..எப்போதும் நல்லதே நினைப்போம், நன்மையே செய்வோம். இதனால் நம்மைச்சுற்றி இருக்கும் ஆரா பரவி வியாபித்து நம்மை மேலும் பதமடைய்ச் செய்யும்.
Designed and maintained by AKR Consultants


