Bookmark and Share 


Healthcare Tips
Parents Home
Couples Suit
Spiritual Path
Student's Corner
Youth Resort
Management
Lighter Moments
Entertainment
Serious Side
World Tour
Internet Links
Snippets

Tamil Software
அழகி மென்பொருள்
   
Tamil-English bilingual webmagazine dedicated to education of the masses through E-books, articles, worldwide informations, Slideshows, Presentations on various subjects, photographs and images, moral and objective oriented stories and Lectures including audio and video

ஜூன் 8 கடல் தினம்

Courtesy: Arumugam, Kalakad

தமிழ் கடல்

(திருமதி ஷைலஜா எழுதியது)

ஆழி சூழ் உலகம்!

மொழிகள் பலவற்றில் ஒருபொருட் பலசொற்கள் அமைந்துள்ளன. தமிழ் மொழியில் ஒருபொருட் பல்சொற்கள் (பெயர்கள்) மிகுந்தே இருக்கின்றன.

அவையாவும் பொதுப் பெயரில் ஒத்து இருந்தாலும் சிறப்புப் பொருளில் தனிதனிக் கருத்தை உணர்த்துகின்றன.

கடல் எனும் சொல்லினை எடுத்துக்கொள்வோம்.

கடற்படை, கடற்செலவு, கடல் வணிகம், முத்துக்குளித்தல், கடலில் மீன் பிடித்தல், கடல் விளையாட்டு ஆகியவைகளில் தமிழ் மக்கள் தலை சிறந்திருந்தனர்.

கடலைக் குறிக்க தமிழில் பல சொற்கள் இருக்கின்றன. ஒவ்வொரு சொல்லும் கடலின் தனித்தனிப் பண்பை தெளிவாக விளக்குவதுடன் கடலைப்பற்றி நம்முன்னோர் பெற்றிருந்த ஆழ்ந்த அறிவையும் நன்கு புலப்படுத்துகிறது.

கடப்பதற்கு மிகவும் அரிதாக இருப்பதால் கடல்(கட+அல்=கடக்க அல்லாதது) என்று பெயர் பெற்றது. மிகவும் ஆழமாக இருப்பதால் ஆழி, ஆழம், பௌவம் என்னும் பெயர்கள் ஏற்பட்டன. பௌவம் என்னும் சொல் ஆழத்தைக் குறிக்கும்.

கடலில் எப்போதும் நீர் பெருகி இருப்பதால் பெருநீர் என்றும் கடலைக் குறிப்பிடுவதுண்டு.

கடலில் எப்போதும் வெள்ளம் மிகுந்திருப்பதால் வெள்ளம் என்றும் அதற்குப்பெயர்.

கடலிலிருந்து உப்பு கிடைப்பதால் உப்பின் உவர்ப்புச் சுவையை ஒட்டி கடலுக்கு உவர் என்றும் பெயர் இருக்கிறது.

கடல் மிகப் பெரியதாக பரவலாக உலகைசுற்றி இருப்பதால் பரவை என்கின்றனர்.

கடலில் அலை அடித்துக்கொண்டெ இருப்பதால் அலை என்றும், ஆறுகள் யாவும் கடலுடன் புணர்வதால் புணரி என்றும் பெயர்கள் வருகின்றன.

மேகம் நீரை மொண்டு கொள்ளும் இடமாகக் கடல் இருப்பதால் கார்கோள் என்று பெயர்பெற்றது.

(கார்=கரியமேகம், கோள்=எடுத்துக்கொள்ளுதல்)

கடலி ல் எப்போதும் இரைச்சல் இருப்பதால் அது ஆர்கலி., நரலை ஓதவனம் (ஓதம்=ஈரம்) என்றும் சக்கரம் வட்டமாக இருப்பது போல கடலும் ஏறக்குறைய நிலத்தைச் சுற்றி வட்டமாக இருப்பதால் சக்கரம், நேமி ஆகியபெயர்கள் எற்பட்டன.

மீன்களுக்கு உறைவிடம் கடல், ஆகவே மகராலயம்(மகரம்=மீன் ஆலயம்=இருப்பிடம்) என்றானது.

கடலில் தண்ணீர் பெரிய நிதியைப் போல இருப்பதால் அதற்கு சலநிதி (சலம்=தண்ணீர் நிதி=பெருக்கு) என்று ஒரு பெயர்.

முத்து பவழம் போன்ற பொருட்களை வாரி வாரித் தருவதால் வாரி, வாரிதி. கடல் நீரின் உறைவிடம், ஆகவே அதற்குப் பெயர் சலதி.

கடலின் நிறம் கருநீலம்,சுவையோ உவர்ப்பு. இரண்டையும் கருதி கடலுக்கு கார்மலி உவரி என்றும் சொல்கின்றனர்.

இவ்வாறு கடலைக் குறிக்கும் பல சொற்கள் தமிழ் மொழியில் பொருட் செறிவுடன் விளங்குகின்றன.

கடலைக் குறிப்பிட பல சொற்கள் இருப்பது போலவே கடலில் செல்லும் பல்வேறு ஊர்திகளை உணர்த்த பல சொற்கள் அமைந்திருத்தல் இயல்பே.

மரக்கலம் என்னும் பொதுச்சொல் நீரில் செல்லும் எல்லா ஊர்திகளையும் குறிக்கும். நிரில்மிதக்கும் கட்டை புணை எனப்படும், இதனை மிதவை என்றும் சொல்வர்.

பலமிதப்புக்கட்டைகளின் இணைப்புக்கு தெப்பம் எனப்பெயர்.

இரு பக்கங்களிலும் வளைந்த மரக்கட்டு கட்டுமரம் எனப்படும்.

கட்டுமரம் என்ற தூய தமிழ்ச் சொல்லை ஆங்கிலேயர்கள் கடன் வாங்கி கட்டமாரான் (catamaran) என்கிறார்கள்!

மரத்தைக் குடைந்து தோண்டி செய்யபடுப்வது தோணி.

ஓடுவது போல விரைந்து செல்வது ஓடம். மீன்பிடிக்க பயன்படும் மரக்கலம் திமில். பன்றிபோல வடிவமுள்ள மரக்கலத்திற்கு பஃறி.

விலங்கு அல்லது பறவைமுகம் போன்ற கலம் அம்பி எனப்படும்.

'பரிமுக அம்பியும் கரிமுக அம்பியும்
அரிமுக அம்பியும்..'

என்னும் அடிகளை சிலப்பதிகாரத்தில் காணலாம்.

பரிசல் என்பது பிரம்பால ஆகிய வட்டமான கலம், காற்றின் இயக்கத்தால் செல்லும் பாய்கட்டிய கலம் படகு.

தண்ணீரைப் பிளந்து செல்லும் போர்க்கலம் நாவாய்.

கப்பல் வங்கம் ஆகிய சொற்கள் பெருங்கலத்தைக்குறிக்கும்.

நீரில் மூழ்கிச்செல்லும் கலம் நீர்மூழ்கிக்கப்பல். (submarine சொல் பிற்காலத்தில் தோன்றியது).

தமிழ் மொழியே கடலாக இருக்க,அதனுள் புதைந்திருக்கும் சொல் எனும் முத்துக்கள் தான் எத்தனை எத்தனை!

Tell A Friend!
Type In Your Name:
Type In Your Email:
Your Friend's Email:
Your Comments:

Receive copy:

PLEASE GIVE YOUR FEEDBACK


*Name:  

*E-mail:  

*Comments:


*Enter number in the text box below
Designed and maintained by AKR Consultants