- India Today
Courtesy: R. Vijayaragavan, Chennai
நண்பர் ஒருவர் சிறு தொழில் ஒன்றை ஆரம்பிக்க எண்ணி, அதற்கான முயற்சிகளில் முழு மூச்சுடன் இறங்கினார்.
தொழில் நடத்த நம்மூரில் ஒருவர் முனைந்தால், அவரை எந்த வழிகளிளெல்லாம் நோகடித்து, "வேண்டாண்டா சாமி!' என, ஓட வைக்கும் கலையை நன்கு கற்று அறிந்தவர்கள் நம் அரசுத் துறைகளை நடத்திச் செல்லும் அதிகாரிகள்!
உட்கார வேண்டுமா, அதற்கு ஒரு லைசன்ஸ். எழுந்திருக்க வேண்டுமா? பின்னால் திரும்பிப் பார்க்க வேண்டுமா? மேலே அண்ணாந்து பார்க்க வேண்டுமா? ஒவ்வொன்றுக்கும் லைசன்ஸ் வாங்கியாக வேண்டும்!
சரி... லைசன்ஸ் வாங்கி விடலாம்... ஆனால், அந்த லைசன்ஸ் எந்த அதிகாரியிடம், எந்தத் துறையில் வாங்க வேண்டும் என்பதை சரியாகச் சொல்லி, வழி நடத்தக் கூட அரசுத் துறையில் ஆட்கள் கிடையாது!
நடைமுறைக்கு ஒத்து வராத, வெள்ளைக்காரன் 1880களில் போட்ட அதே சட்டத்தை, கண்மூடித்தனமாக பின்பற்றி வருகின்றனர்.
உள்ளாட்சித் துறையின் பெரிய அலுவலகம் ஒன்றில் நுழைந்தோம். அங்கிருந்த இத்துறை தொடர்பான பெரிய அதிகாரியை அணுகி, அறிமுகம் செய்து, லைசன்ஸ் தொடர்பாக கேட்டபோது, தன் சகாக்களை அழைத்து, "நம்ம துறையில் ஏதும் இது தொடர்பா லைசன்ஸ் கொடுக்கணுமா?' எனக் கேட்டார்.
சகாக்கள் தமக்குள் விவாதித்து, பின்னர் சட்டப் புத்தகங்களைப் புரட்டி, ஒரு மணி நேரத்திற்குப் பின், "நமக்கும், இதற்கும் தொடர்பில்லை!' என்றனர்.
பின்னர் எங்கெங்கோ சுற்றிய பின், சுகாதாரத் துறைக்கும், இதற்கும் தொடர்புண்டு என்பதை அறிந்து, அங்கு சென்ற பின், "ஆமா சார்! ஹெல்த் இன்ஸ்பெக்டர், சானிடரி இன்ஸ்பெக்டர், பொல்யூஷன் இன்ஸ்பெக்டர், டிரான்ஸ்போர்ட் இன்ஸ்பெக்டர்...' அந்த இன்ஸ்பெக்டர்... இந்த இன்ஸ்பெக்டர் என வாயில் வந்ததை எல்லாம் சொல்லி, இவர்களிடம் இருந்தெல்லாம், "என்.ஓ.சி.,' - "நோ அப்ஜெக்ஷன் சர்டிபிகேட்' – தொழில் தொடங்க தடையேதும் இல்லை என்ற சான்றிதழ் வாங்க வேண்டும் என்றார்.
மேலும், "இந்த, "சர்டிபிகேட்' எல்லாம் வாங்க குறைந்தபட்சம் மூன்று முதல் ஆறு மாதமாகலாம்!' என்றார்.
நண்பர், மூன்று லட்சத்தை முதலீடு செய்து, தொழில் தொடங்க தயார் நிலையில் இருக்கிறார். மூன்று முதல் ஆறு மாத வட்டியைக் கணக்கிட்டுப் பாருங்கள்... "சரி... என்ன தான் வழி?' என நண்பர் கேட்க, "பத்தாயிரம் குடுங்க சார்... எல்லா சர்டிபிகேட்டுகளையும் வாங்கிக் கொடுத்து விடுகிறேன். எல்லா இன்ஸ்பெக்டர்களும் தொழில் நடத்தப் போகும் இடத்தை நேரில் வந்து சோதனை செய்தது போல ஜோடனை செய்து கொள்ளலாமே!' என்றார்.
இந்த கண்றாவியை எல்லாம் தூரத்தில் நின்று பார்க்கும் கொடுமை எனக்கு!
அடுத்து காவல்துறையில், "என்.ஓ.சி.,' —
நகரின் பிசியான இடத்தில் உள்ள ஒரு காவல் நிலையம் —
அங்கு, ரைட்டரிடம் பேசிக் கொண்டிருந்தார் நண்பர். இருவரையும் பார்த்துக் கொண்டிருந்தேன்.
"சார்... உங்க ஆர்வம் புரியுது... நாலு பேருக்கு வேலை கொடுக்க இருக்கும் உங்கள் உபகார குணமும் தெரியுது. ஆனா, இங்க, "விட்டமின் ப' — (பணம்) இல்லேன்னா, பேப்பர்ஸ் எதுவும், "மூவ்' ஆகாது! எனக்கு ஒண்ணு குடுத்திடுங்க... எஸ்.ஐ., அரை நோட்டும் (ஐந்தாயிரம்), இன்ஸ்பெக்டர் முழு நோட்டும் வாங்குவாங்க...' எனக் கூறிக் கொண்டிருக்கும் போதே, ஒரு போன் வந்தது... ரைட்டர், "சார் ரெண்டு நோட்டு ஆகுமுன்னு இன்ஸ்பெக்டர் சொல்லிட்டார்... சரின்னு நீங்க சொன்னா, சுமூகமாக முடிச்சிடலாம்!' என்றார்.
ஏதோ ஒரு கேசை முடிக்க 20 ஆயிரம் ரூபாய் லஞ்சம் பேசுவது புரிந்தது. போன் பேசி முடிந்ததும், கை வண்டி ஒன்றில் மூன்று கூடை பழங்கள் வந்து இறங்கியதைப் பார்க்க முடிந்தது.
"யோவ் வண்டிக்காரரே... இதெல்லாம் ஐயா (இன்ஸ்பெக்டர்) வீட்டுக்கு... ஐயா ஜீப்புலே ஏத்தி விடு!' என்றார் ரைட்டர்!
இங்கு – அங்கு என இல்லாதபடி லஞ்சம் தலைவிரித்தாட தொடங்கி விட்டது. இனி, எந்த ஆட்சியாளர் வந்தாலும், தடுத்து நிறுத்த முடியாது. இன்ன வேலைக்கு இவ்வளவு அன்பளிப்பு என, "ரேட் கார்டு' – ஓட்டல்களில் பண்டங்களின் விலைக்கு விலைப்பட்டியல் அட்டை தருவது போல, அரசுத் துறை, காவல் துறை அலுவலகங்களில், "ரேட் – கார்டு' பிரேம் போட்டு தொங்க விட்டாலும், ஆச்சரியம் கொள்வதற்கில்லை!
- Dinamalar
Designed and maintained by AKR Consultants

