- சீதாம்மாவின் குறிப்பேடு
Courtesy: Smt. Seethalakshmi
வாழ்க்கை எப்பொழுதும் யதார்த்தமாக இருந்துவிடுவதில்லை. திடீர்த் திருப்பங்களும், சில நேரங்களில் அதிர்ச்சிகளும் காண நேரிடலாம். பல அனுபவங்கள் பெற்ற என்னையே ஆட்டிவைத்த ஓர் நிகழ்வு. மேலோட்டமாகப் படித்தால் “இந்தம்மா இப்படி வம்பை விலைக்கு வாங்கியிருக்க வேண்டாம்” என்று எண்ணத்தோன்றும். அது தவறில்லை. அதுதான் யதார்த்தம். ஆனால் நான் அச்சப்பட்டு விலகியிருந்தால் சில உயிர்கள் போயிருக்கும். சிலர் சிறைகளுக்குப் போயிருக்கவேண்டும்.
நள்ளிரவு
அயர்ந்து தூங்கிக் கொண்டிருந்தேன். திடீரென்றென்று வீட்டின் காலிங் பெல் அடித்தது. நான் வீட்டில் தனியாக இருந்தேன். ஏற்கனவே போலீஸ் துறையில் வேலை பார்க்கின்ற ஒரு நண்பர் கூறியது நினைவிற்கு வந்தது.
“சமூக சேவைன்னு இப்போதும் ஏதாவது செய்துகிட்டிருக்கீங்க. ராத்திரி யார் வந்து உதவின்னு கேட்டு வந்தா கதவைத் திறக்காதீங்க. தெரிஞ்ச பசங்க வந்தாலும் திறக்காதீங்க. சில புகார்கள் வர ஆரம்பிச்சிருக்கு. சில பணக்கார பசங்க கூடச் செலவுக்கு அதிகமா பணம் வேண்டி, திருட ஆரம்பிச்சிருக்காங்க. தனியா இருக்கறதுனாலே எதையும் செய்யலாம்”
இந்த சம்பவம் நடந்தது 2002.
நான் எழுந்திருந்து போய் விளக்கு போட்டு பார்த்தேன். முன்னால் கம்பிகளுடன் கூடிய ஜன்னல். வந்திருந்தவன் என் அன்புக்குரிய செல்லப் பிள்ளை சிவா. துடிதுடிப்பு அதிகம். அவன் பக்கத்தில் வேறு யாரோ ஒரு பையனும் நின்று கொண்டிருந்தான்.
ஏண்டா சிவா, வீட்டுக்கு வர்ர நேரமா இது. காம்பவுண்ட் சுவத்தில் ஏறிக் குதிச்சு வந்திருக்கியே. நல்ல வேளை நான் கிழவி. இல்லேனா ஊர் என்ன நினைக்கும். கதவைத் திறக்க மாட்டேன் போய்த் தொலை.
அம்மா, கோவிச்சுக்காதீங்க. ரொம்ப ரொம்ப முக்கியமான விஷயம். உங்க கிட்டே என்ன செய்யறதுன்னு கேட்க வந்திருக்கேன். ஒருத்தர் உயிர் ஆபத்துலே இருக்கு. அதான் வந்தேன். திறங்கம்மா.
அதற்கு மேல் தயக்கம் இல்லை. சிவாவும் என்னைப் போல் ஒரு அசடு. யாருக்காவது கஷ்டம்னா வரிஞ்சு கட்டிக் கொண்டு உதவி செய்வான். கதவைத் திறந்து உள்ளே வரச் சொன்னேன். அவர்கள் உள்ளே வரவும் வாசல் கதவைப் பூட்டி விட்டேன். உட்கார்ந்த உடனே சிவா பேசினான். அவன் பேசப் பேச அதிர்ச்சியில் என்னால் பேச முடியவில்லை. அதன் சுருக்கம் மட்டும் கூறுகின்றேன்.
வந்தவன் பெயர் குமார். அவனும் சிவாவுடன் கல்லூரியில் படித்து வருகின்றான். மூன்றாவது வருடம். அவனுடைய அப்பா பணக்காரர். மதுரையில் இருக்கின்றார். அவருக்கு ஒரு மகனும் ஒரு மகளும் தான் குழந்தைகள். மகன்மேல் உயிரையே வைத்திருக்கின்றார். அவனுக்கு ஒரு காதலி. அவள் ஊர் சேலம் பக்கம். (இங்கே ஊர் பெயர்கள் கூட மாற்றி எழுதியிருக்கின்றேன்). இருவரும் பல வருடங்களாகக் காதலித்து வந்திருக்கின்றனர். ஒரு முறை இருவரும் திருப்பதிக்குச் சென்றிருக் கின்றனர். இரவு தங்கலில் இணைந்துவிட்டனர். பலன் அந்தப் பெண் கர்ப்பவதியாகிசிட்டாள். இப்பொழுது ஏழு மாதங்கள் ஆகிவிட்டன. குமாருக்கு இப்பொழுதுதான் சொல்லி இருக்கின்றாள். ஒரு டாக்டரிடம் போயிருக்கின்றார்கள். ஏழு மாதக் குழந்தையை எடுப்பது அவ்வளவு எளிதல்ல. வயிற்றில் அறுவை செய்து எடுக்கக் கூடாது. திருமணமாகத ஒருத்தியின் வயிற்றில் வடு இருப்பது அந்தப் பெண்னுக்கு நல்லதல்ல. எல்லாம் பேசிய பின் சிகிச்சை செய்யவேண்டுமென்றால் ஒரு காகிதத்தில் இருவரும் கையெழுத்து போட்டுக் கொடுக்க வேண்டும். பெண்னுக்கு என்ன ஏற்பட்டலும் டாக்டர் மேல் பொறுப்பு சுமத்தக் கூடாது.
இதைக் கேட்கவும் இருவரும் பயந்து விட்டனர். ஆஸ்பத்திரியில் அறுவை சிகிச்சைக்கு முன்னர் இது போன்று எழுதி வாங்குவது வழக்கம். எனவே டாகடர் சாதாரணமாகக் கேட்டது இவர்களுக்குப் பயத்தைக் கொடுத்து விட்டது. சிவாவிடம் ஆலோசனை கேட்டிருக்கின்றார்கள். அவனும் சின்னப் பையன். ஆலோசனை கேட்க என்னிடம் கூட்டி வந்து விட்டான். செய்தி சொல்லி வரும் பொழுதே என் ஆத்திரமும் வளர்ந்தது. திட்ட ஆரம்பித்துவிட்டேன்
“பாவிப் பயலே, போயும் போயும் கோயில் ஸ்த்லங்களுக்குப் போயா தப்பு செய்தீர்கள். எல்லாத்துக்கும் அவசரம் !ஊரெல்லாம் குடும்பக் கட்டுப்பாடு திட்டப் பிரச்சாரம் நடக்குதே, ஜாக்கிரதையாக இருந்திருக்க வேண்டாமா?”
“அம்மா, திட்டம் போட்டு செய்யல்லே. சாமி கும்பிடத்தான் போனோம். ராத்திரி ஒரே இடத்தில் தங்கினோம். இதுவரை இப்படி தங்கினதில்லே தப்பு செய்துட்டோம். “இப்படி சொல்லிவிட்டு குமார் அழ ஆரம்பித்துவிட்டான்.
“குமார், அந்தப் பொன்ணு மேலே எனக்கு சந்தேகமா இருக்கு. எந்தப் பெண்ணுக்கும் ஏழு மாதம் ஆகிற வரைக்கும் தான் கர்ப்பமானது தெரியல்லேனு சொல்றது நம்பும் படியா இல்லே. நாளைக்கு அவளயும் கூட்டிக் கிட்டு வா. பேசுவோம். இப்போ நான் ஒண்னும் சொல்ல முடியாது. யோசிக்கணும் “
அம்மா, எப்படியோ நடந்து போச்சு. அந்தப் பொண்ணுக்கு என்னமாவது ஆனா இவனும் செத்துடுவான். கோவிச்சுக்காதீங்க. என்ன செய்யலாம்னு சொல்லுங்க. செய்யச் சொல்றேஎன் என்று சிவா அவன் நண்பனுக்காகப் பரிந்து பேசினான்.
மறுநாள் அந்தப் பெண்ணுடன் வரச் சொன்னேன். [இப்பிரச்சனையை விட்டு விலக விரும்பவில்லை. அவர்கள் செய்தது சரி, தப்பு என்று சொல்லும் நிலை கடந்துவிட்டது. இரு உயிர்கள் சம்பந்தப்பட்டது. எப்படியும் காப்பாற்றியாக வேண்டும் என்றே நினைத்தேன்.
மறுநாள் காதலி மாலாவுடன் குமாரும் சிவாவும் வந்தனர். ஆண்கள் இருவரையும் போகச் சொல்லிவிட்டு அந்தப் பெண்ணுடன் தனியாகப் பேசினேன். எப்படி ஒரு பெண் தான் கர்ப்பமாகி இருப்பதை ஏழு மாதம் வரை தெரியாது என்று சொல்ல முடியும். நான் வேலை பார்த்த துறையில் கர்ப்பிணிகள் பாதுகாப்புப் பிரிவில் பல ஆண்டுகள் வேலை பார்த்திருக்கின்றேன். மேலும் நான் ஓர் தாய். கேள்விகளின் விபரங்கள் இங்கே தர விரும்பவில்லை. நான் கேள்விகள் கேட்கக் கேட்க அழ ஆரம்பித்துவிட்டாள் கடைசியாக ஒன்று கேட்டேன்.
குமார் பணக்காரவீட்டுப் பையன் என்று தெரிந்து திட்டமிட்டுச் செய்தாயா? இதைக் கேட்கவும் சத்தமாக அழுது கொண்டே வெளியே ஓடினாள். அவளைப் பிடித்துக் கொண்டு குமார் உள்ளே வந்தான். சிவாவும் வந்தான். குமாருக்கு என் மேல் ஆத்திரம்.”அவளிடம் நீங்கள் அப்படி பேசி இருக்கக் கூடாது. உங்கள் உதவி வேண்டாம். அவளுக்கு ஏதாவது ஆனால் நானும் தற்கொலை செய்து கொண்டு செத்துப் போவேன் “என்று கோபமாகச் சொல்லிவிட்டு புறப்பட்டான் “நில்லு. நிலைமையை இன்னும் மோசமாக்காதே. உட்கார். பேசுவோம்” சிவா அவன் நண்பனைச் சமாதானப் படுத்தி உட்காரவைத்தான்.
மாலாவின் அப்பா ஜாதி வெறி பிடித்தவர். வேற்று சாதிப் பையனுக்குப் பெண் கொடுக்கமாட்டார். குமாரின் அப்பா நல்லவர். மகன் விருப்பத்தை யறிந்தால் முதலில் கோபப்பட்டாலும் பின்னால் சமாதானம் ஆகிவிடுவார். ஆனாலும் எதுவும் தீர்மானக நினைக்க முடியாது. எனவே இருவரையும் ஏதாவது கோயிலுக்குச் சென்று உடனே திருமணம் செய்து கொள்ளச் சொன்னேன். என்னை வரச் சொன்னதற்கு மறுத்து விட்டேன். நண்பர்களைக் கூட்டிப் போகச் சொன்னேன். கர்ப்பத்தை இப்பொழுது கலைக்க முயன்றால் உயிருக்கு உத்திரவாதம் கிடையாது என்பதை உணர்த்தினேன். இப்பொழுதே கொஞ்சம் வயிறு உப்புசமாக தெரிந்தது. இன்னும் ஒரு மாதம் போனால் மறைக்க முடியாது. குழந்தைப் பிரசவம் பிரச்சனை. அவர்கள் திருமணம் செய்து கொண்டால் அந்தப் பெண்ணை வேறு இடத்தில் வைத்துப் பாதுகாக்க உதவி செய்கின்றேன் என்றேன். ஆனால் அவர்கள் சட்டப்படி திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று வற்புறுத்தினேன். குழந்தை பிறந்த பிறகு இருவீட்டாருக்கும் தெரியப் படுத்துவதே புத்திசாலித்தனம். திருமணமாகிவிட்டால் போலீஸ் உதவியையும் நாடலாம் என்று சொன்னேன்.
இன்னும் 15 நாட்களில் நான் அமெரிக்கா புறப்பட வேண்டியிருந்தது. எனவே இன்னும் ஒரு வாரத்தில் திருமணம் முடித்து, பின்னர் என்னை வந்து பார்க்கச் சொன்னேன். அப்படி செய்தால் தான் நான் புறப்படும் முன் மாலா எங்கே , யாருடன் தங்கலாம் என்பதைச் சொல்வேன் என்றேன். இதைத்தவிர வேறு வழியில்லை. தாமதித்தால் மாலாவின் உயிருக்கும் ஆபத்து, அவர்கள் காதலுக்கும் ஆபத்து என்று கூறிவிட்டேன்.
நினைப்பதெல்லாம் நடந்துவிட்டால் தெய்வம் என்ற ஒன்றை யாருமே நினைக்கமாட்டான். குமார் வந்து போன இரண்டாம் நாள் நானும் என் தங்கை சரசாவும் காஞ்சிக்குக் காமாட்சி தரிசனம் செய்யச் சென்றிருந் தோம். சென்னைக்குச் செல்லும் பொழுதெல்லாம் ஒரு முறையாவது என் அம்மா காமாட்சியைப் பார்க்காமல் வர மாட்டேன். அங்கிருந்து திரும் பும் பொழுது குரோம்பேட்டையில் உள்ள என் தங்கை வீட்டிற்குச் சென்றோம். அங்கே எனக்கு அதிர்ச்சி காத்திருந்தது.
சிவாவும் குமாரும் அங்கே இருந்தனர். குமார் அழுது கொண்டிருந்தான் பைத்தியம் பிடித்தவனைப் போல் இருந்தான். மாலாவின் அப்பா வந்து மகளைக் கூட்டிச் சென்று விட்டார். எங்கு சென்றார்கள் என்பது தெரியவில்லை. குமாருக்கு உடனே மாலா வேண்டுமாம் அல்லது எலெக்ட்ரிக் ரயிலில் விழுந்து இறந்து விடுவானாம். சிவா அவனைக் கூட்டி வருவதற்குள் மிகவும் கஷ்டப் பட்டிருக்கின்றான். காதல் படுத்தும்பாடு! எத்தனை அனுபவங்கள் இருந்தும் ஒன்றும் எனக்குக் கை கொடுக்க வில்லை.
அப்படியே திகைத்துப் போய்விட்டேன்.
Designed and maintained by AKR Consultants


