- பீஷ்மாஷ்டமி
Courtesy: Vishalam Raman
ஸ்ரீ பீஷ்மாசார்யர் அவரது நாட்டு நலனுக்காகவே வாழ்ந்து தன் வாழ்க்கையில் பிரும்மசாரி விரதம் கடைபிடித்து தன் தந்தைக்காக திருமண எண்ணமே இல்லாமல் அரசையும் துறந்த பெரிய மகான். உலகத்தில் சாதரணமாக எல்லோருமே இறக்கும் போது மகன் அருகில் இருக்க, அவன் கையால் தகனம் கிடைக்கும் பாக்கியம் வேண்டும் என்று எண்ணுவர், தவிர அந்தப் பிள்ளை வழியாகச் செய்யும் கர்மாவும் போகும் வழிக்குப் புண்ணியம் சேர்க்கும் என்ற கொள்கையுடன் இருப்பது நமது ஹிந்து மதம்.
இதனால் தானோ ஆண் மகன் பிறக்க பலர் வேண்டுகிறார்கள். சர்தார்ஜி குடும்பத்தில் ஆண் மகன் பிறக்க லோஹ்ரி என்ற பண்டிகையை மிக விமரிசையாகக் கொண்டாடுவார்கள். அதாவது நமது போகிப்பண்டிகையின் போது அவர்களது லோஹ்ரி. சிலர் இதை லோடி என்பார்கள். இதுவே பெண் குழந்தையாக இருந்தால் அத்தனை விமரிசையாக நடத்தமாட்டார்கள். சர்தார்ஜி குடும்பத்துடன் மிகவும் நெருக்கமான தொடர்ப்பு இருந்ததால் நான் இதை அறிவேன்.
பீஷ்மர் இறைவனடி சேர்ந்த நாள் ரதசப்தமி. அந்த மகானின் நினைவாக அர்க்கியம் விடுவது வழக்கம். மாக மாதம் என்று சொல்லும் தை 12லிருந்து மாசி பத்து வரை மாக ஸ்னானம் செய்வது வழக்கம். பீஷ்ம நிர்யாணம் அஷ்டமி நாளாகக் கொண்டு பீஷ்மாஷ்டமி என்றும் சொல்லப்படுகிறது.
மகாபாரத யுத்தம் மார்கழியில் அமாவாசையில் தொடங்கியது. பீஷ்மர் கௌரவப்படைக்குத் தலைமையேற்றார். அர்சுனன் அம்புகள் அவர் உடல் முழுவதும் துளைத்தன, ஆனாலும் தனக்கு எப்போது மரணம் வேண்டுமோ அப்போதுதான் மரணம் சம்பவிக்கும் என்ற வரம் அவர் தந்தை சந்தனு கொடுத்ததால் அவர் உயிரைப் பிடித்தபடி 58 நாட்கள் உயிரோடு கிடந்தார். அவருக்கென்று அம்புகளால் படுக்கை அமைத்துக்கொடுத்தான் அர்சுனன். அவரது தாய் கங்கா தேவி அவருக்குத்தாக சாந்தி செய்ய பூமியின் அடியில் போய் பாதாள கங்கையாக மேலே பீய்ச்சடித்து அவர் தாக்த்தைத் தீர்த்தாள். தாயல்லவா! மகன் இந்த நிலையில் இருக்க எப்படிச் சகிப்பாள்?
தட்சிணாயணம் என்பது தேவர்களுக்கு இரவு, பீஷ்மர் இந்தக்கால்த்தில் மரணத்தைத் தழுவ விரும்பவில்லை. தேவர்கள் விழித்து வரும் நாளான உத்த்ராயணக் காலம் வரை அம்புப் படுக்கையில் இருந்தார். அந்த நேரத்தில் தான் தருமருக்கு அறங்கள் பற்றி உபதேசித்தார். இந்தச்சந்தர்ப்பத்தில் தான் பிறந்தது ஸ்ரீவிஷ்ணு சஹஸ்ரநாமம்.
இவர் இந்த மாதிரி பிறந்து பிரும்மசாரியாக வாழ்ந்த காரணம் என்ன?
பிரும்மலோகத்திற்கு ஒரு முறை கங்கை சென்றாள். அந்த நேரத்தில் மன்னன் மஹாபிஷக் கங்கையின் அழகில் மயங்கி மோகம் கொண்டான். பிரும்மா இதைக் கண்டு இருவரையும் பூமியில் பிறக்க சபித்தார். இந்த மஹாபிஷக் தான் சந்தனுவாகப் பிறந்தார்.
வ்சிஷ்ட முனிவரிடம் காமதேனு பசு இருந்தது, கேட்டதெல்லாம் கொடுக்கும் பசு. அனலன் அணிலன், ஆபத்சலன், சோமன், தரன், த்ருவன், பித்யூஷன், பிரபாசன் என்பவர்கள் அஷ்ட வசுக்கள் என வழங்கப்பட்டனர். அதில் பிரபாசனின் மனைவி தன் தோழிக்காக காமதேனுவின் பாலைக்கேட்க அஷ்ட வசுக்கள் அதைத்திருட முற்பட்டனர். ஆனால் வசிஷ்டர் இதை அறிந்து பூமியில் பிறக்க இவர்களுக்குச் சாபம் கொடுத்தார்.
பிரபாசனால்தான் இந்த ஏற்பாடு நடந்ததால் அவன் மனைவி சொல் கேட்டுக் குற்றம் புரிய நினைத்தால் அவனுக்குத் திருமண இன்பம் என்பதே இல்லாமல் போக வேண்டும் என்று சபித்தார். அஷ்ட வசுக்கள் கங்கையிடம் வந்து தாங்கள் அவளுக்கு மகன்களாகப் பிறக்க வேண்டும் என்று வேண்டிக்கொண்டனர்.
இதை நிறைவேற்ற கங்கை அஸ்தினாபுரத்து மன்னன் பிரதீபனைக் கண்டு மயங்கி, தன்னை அவர்து வலது தொடையில் அமர்த்தி மனைவிஸ்தானம் கொடுக்கும்படி வேண்டிக்கொண்டாள். ஆனால் பிரதிபனோ வலது தொடை மகளுக்கு உரியது ஆதலால் அவளை ஏற்றுக்கொள்ள இயலாது என்றார். பின்னர் தன் மகன் சந்தனுவுக்கு மனைவியாகும்படி அனுப்பி வைத்தார். கங்கையும் ஒரு நிபந்தனை போட்டது எல்லோருக்கும் தெரியும். தான் செய்யும் எந்தச் செயலைப்பற்றியும் கேட்கவோ, கோபித்துக்கொள்ளவோ, கண்டு கொள்ளவோ கூடாது என்பதே நிபந்தனை.
வரிசையாக ஆண்குழந்தைகள் ஏழையும் பிறந்த் உடனேயே கங்கை ஆற்றில் வீசினாள். இவர்கள் தான் அந்த ஏழு வசுக்கள். எட்டாவது பிறந்தது, சந்தனுவுக்கு மனது கேட்கவில்லை, அவள் ஆற்றில் போட வந்த போது சந்தனு தடுத்தார். அவ்வளவுதான் கங்கை இனி சந்தனுவுடன் இருக்க முடியாது என்றும் குழந்தையைத்தான் வளர்த்து சரியான நேரத்தில் கொண்டு தருவதாகவும் சொல்லிச் சென்றுவிட்டாள். இந்த எட்டாவது மகன் தான் அஷ்ட வசுக்களில் பிரபாசன் என்பவன். கங்கை மகனானதால் காங்கேயன், தேவவிரதன் என்ற பெயரில் அஸ்தினாபுரத்தில் பின் வந்தார்.
மனைவியைப் பிரிந்ததால் சந்தனு செம்படவன் மகள் சத்தியவதியைக் கண்டு மோகித்து அவளது தந்தையிடம் பெண் கேட்டார். அவரோ சத்தியவதியின் பிள்ளைகளே அரசபதவி அடைய வேண்டும் என்று கட்டளை இட்டார். இதனால் மனம் கலங்கி சந்தனு வரவே தன் தந்தையின் கலக்கத்தை தேவவிரதன் அறிந்து தான் நைஷ்டிக பிரும்மசாரியாக இருக்கப்போவதாக்வும் தனக்கு ராஜ்யபதவி வேண்டாம் என்றும் எந்தப் பெண்ணையும் மனதால் கூட நினைக்க மாட்டேன் என்றும் சத்தியம் செய்து கொடுத்தார்.
அஸ்தினாபுர வாரிசு ஒரே மகன் அரசகுமாரன் தன் தந்தையின் சந்தோஷத்திற்காக மணவாழ்க்கை, அரசபதவி இரணடையும் துறந்ததைப் பார்த்து தேவர்கள் மலர்கள் சொரிந்தனர். "பீஷ்ம" என்று வாழ்த்தினர். இதைக்கண்டு மனம் நெகிழ்ந்து சந்தனு இரண்டு வரம் அளித்தார். எப்போது தேவவிரதன் மரணத்தை விரும்புகிறானோ அப்போதுதான் மரணம் சம்பவிக்கும்.
பீஷ்மர் மகாவீரர், உத்தமர், சத்தியசீலர், எல்லா கலைகளையும் கற்றவர். தாய் தந்தையை தெய்வமாகப் போற்றி வணங்கியவர். கடைசிவரை பிரும்மசாரியாகவே இருந்தார். இத்தனைச் சிறப்புப் பெற்ற அவருக்கு பீஷ்மாஷ்டமி அன்று அர்க்கியம் விட பாவங்கள் விலகும் என்ற நம்பிக்கை.
அத்துடன் சந்ததியர்கள் சிறப்பாக வாழ்வார்களாம்.
Designed and maintained by AKR Consultants



