- லொள்ளுப் பாட்டியும்
- விளக்கெண்ணை மகாத்மியமும்
Courtesy: Natarajan Kalpattu
“சுந்தா, சாரூ.... ரொம்ப நாளைக்கப்பறம் பாட்டி வராளாண்டா.”
“ஜாலிதான். கூடவே பக்ஷணமும் வருமே. ஆனா....”
“ஆனா என்னடா ஆவன்னா?”
“அது இல்லெம்மா....”
“எது இல்லெடா?”
“பாட்டி வந்தா பக்ஷணமெல்லாம் வரும். ஜாலியாத்தான் இருக்கும். கூடவே லொள்ளும் வருமே?”
“பெரிய்வாளெ அப்பிடியெல்லாம் சொல்லக் கூடாது.”
“ஏனாம்?”
“ஏன்னா அது அப்படித்தான்.”
“ஆமாம். நீ எப்பொவுமே இப்பிடித்தான். எதாவது ஒண்ணெ ஏன்னு கேட்டா விளக்கம் சொல்ல மாட்டே. அது அப்பிடித்தான்னு பேச்செ முடிப்பே. எங்க டீச்சர் சொல்லி இருக்காங்க, யாராவது ஒண்ணு சொன்னா அதெ அப்பிடியே ஏத்துக்கக் கூடாது. ஏன்னு கேட்டுத் தெரிஞ்சுக்கணும்னு.”
(இந்த காலத்துப் பசங்க பாருங்க... நாம ஒண்ணு சொன்னா ஏத்துக்க மாட்டாங்க. அவுங்க டீச்சர் சொன்னா ஏத்துப்பாங்க அதெ வேத வாக்கா.
ரெண்டு வருசத்துக்கு முன்னெ நானும் என் பொஞ்சாதியுமா அமெரிக்கா போயிருந்தோம். அப்பொ சிகாகோவுலெ ஒரு சொந்தக்காரங்க ஊட்டுக்குப் போயிருந்தோம். அவ்ரோடெ அஞ்சு வயசுப் பொண்ணும் அவ கூட படிக்கெற பொண்ணுமா வெளையாடிக்கிட்டு இருந்தாங்க. அப்பொ அந்த்ப் பொண்ணு சொன்னா, “டீ எங்க அம்மா இன்னிக்கும் ஸ்கூல்லேந்து வந்ததும் இன்னிக்கி ஸ்கூல்லெ என்ன நடந்துதுன்னு கேட்டாடீ.” எங்க ஊட்டுப் பொண்ணு சொல்றா, “கேட்டா என்னடீ? ஒனக்கு சொல்லணும்னா சொல்லு. இல்லேன்னா பேசாமெ இருந்துடு.”
போதுங்களா இந்த காலத்துக் கொழெந்த்களோட மூளெ எப்பிடி வேலெ செய்யுதுன்னு புரிஞ்சுக்க? வாங்க நாம் பாட்டியெப் பாகப் போவலாம்.)
வாசலில் ஆடோவில் வந்து இறங்குகிறார்கள் ஐயரும் அவர் அம்மாவுமாக. கூடவெ ஒரு நசுங்கல்கள் பல கொண்ட திரேதா யுகத்து இரும்பும் பெட்டி, கித்தான் பை ஒன்று மற்றும் மடி சஞ்சி. மடி சஞ்சி என்பது கம்பளியிலால் ஆன ஒரு பை. அதில்தான் பாட்டி தான் நேற்று துவைத்து மடியாகக் காயவைத்த் புடவையையும் ஒரு மலையாள வலைத் துண்டினையும் வைத்திருப்பாள்.
“வாங்கோம்மா…”
“வா பாட்டீ…”
“வா பாட்டீ…”
“கண்ணுங்களா… எப்பிடி இருக்கேள்?
“நாங்க நன்னா இருக்கோம் பாட்டீ…” சுந்தா, சாரூ இருவரும் ஏக காலத்தில்.
“பர்வதம் நீ எப்ப்டிம்மா இருக்கே?”
“எனக்கென்னம்மா நான் நன்னாத்தான் இருக்கேன். நீங்க ஒடம்பு ஒண்ணுமில்லாமெ இருக்கேளா?”
“ஏதோ இருக்கேண்டிம்மா.”
“ஏம்மா அலுத்துக்கறேள்?”
“பின்னெ என்னடி? இன்னிக்கோ நாளெக்கோ போக வேண்டிய கட்டெ இது.”.
“அப்பிடிச் சொல்லாதீங்கோம்மா. நீங்கதான் ரொம்ப நாள் எங்க கூட இருந்து நல்லது கெட்டது சொல்லிக் கொடுக்கணும்.”
பக்ஷணங்கள் இடம் மாறுகின்றன பாட்டியின் பெட்டியில் இருந்து சமையல் உள் அலமாரிக்கும், அவற்றில் இருந்து சில குழந்தைகளின் கைக்கும்.
“ஊருலேந்து ஆத்துலெ எறெக்கின ஆமணக்கு எண்ணெ கொண்டு வதிருக்கேன். ஆமாம் கொழெந்தேளுக்கு வெளெக்கெண்ணெ கொடுத்து எவ்வொளோ நாளாச்சு?”
‘ஐயையோ ஆரம்பிச்சுதுடா பாட்டி லொள்ளு’ என்று சுந்தா மனதுக்குள் சொல்லிக் கொண்டே, “பாட்டீ இந்த பாழாப் போற வெளெக்கெண்ணெயெ அப்பொப்பொ குடிக்காட்டா என்னவாம்? அதெ நெனெச்சாலே வயத்தெக் கொமட்டிண்டு வாயிலெடுக்க வெக்கெறது.”
“ஆமாண்டாப்பா. வயசானவா சொன்னாக் கேக்க மாட்டேள். லிட்டர் அம்பது ரூவாக்கு விக்கெற வெள்க்கெண்ணெயெ அழகா லேபில் ஒட்ட்டி அட்டெப் பொட்டிக்குள்ளெ போட்டு நூறு மில்லி எழுபத்தஞ்சு ரூவானு கடெலெ வித்தான்னா அதெ வாங்குவேள். டீவீலெ ‘வயிற்று வலியா? தடவுங்கள் தொப்புளைச் சுற்றி பிரெஞ்சு ஆயிலை. பிள்ளை பெற்றதனால் அடி வயிற்றில் பாம்புச் செதிள் போலக் கோடுகளா? தடவுங்கள் பிரெஞ்சு ஆயிலை. மூட்டு வலியா, தலை வலியா? தடவுங்கள் பிரஞ்சு ஆயிலை’ன்னு சொன்னான்னா அதை நம்புவேள். என்ன ஒண்ணு அவன் விக்கெற எண்ணெலெ வெளெக்கெண்ணெ நாத்தத்தெ எடுத்தூட்டு வாசனைக்கு கொஞ்சம் க்ல்பூரத்தெ சேத்துருக்கான்.”
“பாட்டி அது பிரெஞ்சு ஆயிலுமில்லெ, ஜெர்மன் ஆயிலுமில்லெ. ஃப்ரேன்ச் ஆயில் பாட்டி.”.
“என்ன ஆயிலானா என்ன? உள்ளெ இருக்கறது வேளெக்கெண்ணதனே?”.
“சரி பாட்டி. வெளெக்கெண்ணெ பத்தி கொஞ்சம் சொல்லேன் கேக்கறோம்.”
“சொல்றேன் கேளு. ஒங்க அப்பால்லாம் ஒங்களெப்போல கொழந்தையா இருந்தப்போ மூணு மாசத்துக்கு ஒரு த்டவெ தவறாமெ வெளெக்கெண்ணெ கொடுக்கறது உண்டு. அந்த எண்ணெயெ கடேலெ வாங்க மாட்டோம். ஆமணக்கு வெறெய, அதெ முத்துக்கொட்டென்னும் சொல்லுவாளே அதெ, வாங்கிண்டு வந்து அம்மிலெ வெச்சுத் தட்டி ஒரு சின்னத் தவலெலெ தண்ணிய வெச்சு அதுலெ தட்டின ஆமணக்கெ வெறெயப் போட்டு மூடி வெச்சுக் கொஞ்ச நேரம் கொதிக்க வெச்சு ஆறினப்பறம் மேலெ மொதண்டு இருக்கற எண்ணெய் ஒரு பாத்திரத்துலெ இறுத்துக் கொட்டி அந்த எண்ணெய ஒரு சின்னக் கரண்டி அளவு கடுக்காக் கஷாயத்தோடெ சேத்துக் கொடுப்போம். ஒரு ஏழெட்டு த்டவெ நன்னா பேதியாகும். வயத்துலெ இருக்கற மலம், பூச்சி, புழு எல்லாம் வெளிலெ பீச்சிண்டு வந்துடும். அன்னிக்கி சீரக ரசமும் பருப்புத் துகைலுந்தான் சாப்பாடு.
பொறந்த கொழெந்தெ சில சம்யம் வயத்து வலினாலெ அழும். அப்பொ தொப்புளெச் சுத்தி வெளெக்கெண்ணெ தடவுவா. அஞ்சு நிமிஷத்துலெ அத்தெனெ நாழி அழுத கொழெந்தெ சிரிக்கும். வெளெக்கெண்ணையையும், வசம்பு போல ‘பிள்ளெ வளப்பான்’னு சொல்லுவா.”
“அதென்ன பாட்டி வசம்பு? எதோ வம்புங்கறெ மாதிரி இருக்கு.”
“வசம்புங்கறது மஞ்சள் இஞ்சி மாதிரி ஒரு செடியோட கெழங்கு..
கொழெந்த வயத்துலெ வாயு உண்டாகி அதுனாலெ அழுதுதுன்னா வசம்பெச் சுட்டுக் கரியாக்கின பக்கத்தெ ஒரு சந்தனக் கல்லுலெ ஒரு ரெண்டு சொட்டுத் தண்ணி உட்டு எழெச்சு அந்தக் கரி விழுதெ நாக்குலெ தடவுவா. வயத்துலெ இருந்த வாய்வெல்லாம் மறஞ்சு போயி கொழெந்தெ அழுகயெ நிறுத்திடும்.”
“அது என்ன் பாட்டி மேஜிக்கா?”
“மந்திரமும் இல்லெ, மாயமும் இல்லெ. வசெம்ப அப்பொ சுட்டுக் கரியாகினதுனாலெ அந்தக் கரி நெறெய்ய வாயுவெ தனக்குள்ளெ ஏத்துக்கற சக்தி படெச்சிருக்கும். அதோட கூட வசம்புலெ இருக்கற மருத்துவ குணமும் சேந்துக்கும். இப்பொ அதை மாதிரிக் கரிப் பொடியெ உண்டெ உண்டெயாப் பண்ணி பாட்டில்லெ போட்டு ‘வாயுத் தொல்லையா? சாபிடுங்கள் இதை’ன்னு விளம்பரம் பண்ணி விக்கறா.”
“ஆமாம் பாட்டி. எனக்குக் கூட இப்பொ ஞாபகம் வறது. அன்னிக்கி கெமிஸ்ட்ரீ வாதியார் சொல்லிண்டு இருந்தார் அப்பொ பண்ண கரி தன்னோட கன பரிமாணத்தெப் போல பல மடங்கு வாயுவெ தனக்குள்ளெ இழுத்துக்கும்னு.”
“இன்னும் சொல்றேன் கேளு. முன்னெல்லாம் பொறந்தெ கொழெந்தெக்கு கொஞ்ச நாள் உச்சந்தலெலெ கொஞ்சம் வெளெக்கெண்ணெயத் தடவுவா. அதுக்குப் பேரு உச்சி இடறதுன்னு சொல்லுவா. ஒடம்பு சூட்டெத் தணிக்கும்னு சொல்லுவா.”
“ஒடம்பு சூட்டெ எதுக்கு பாட்டீ தணிக்கணும்? நம்ம ஒடம்புக்கு சூடு வேணும்னுதானே நாம சாப்படற சாப்பாடு ஜீரணமாகி உஷ்ணத்தெக் கொடுக்கறதுன்னு சொல்வாளே?”
“நான் சொல்ற சூடு அந்த் சூடு இல்லெடா. கணச்சூடுன்னு சொல்லுவாளே அது, இங்கிலீஷுலெ அதெ ரிக்கெட்ஸ்னோ பிக்கெட்ஸ்னோ சொல்லுவாளே அதுன்னு நெனெக்கெறேன்..”
“அது பிக்கெட்ஸ் இல்லெ பாட்டி. ரிக்கெட்ஸ். மேலெ சொல்லு விளெண்ணெயெப் பத்தி.”
“பெரியவாளுக்குத் தலெ வலிச்சுதுன்னா வெத்திலெலெ வெளெக்கெண்ணெயத் தடவி நெருப்புலெ கொஞ்சமா வாட்டி சூட்டொட நெத்திலெ போடுவா. தலெ வலி பறந்தூடும்.”
“அது சரி பாட்டி. அந்த எண்ணெக்கி ஏன் வெளெக்கெண்ணென்னு பேரு வெச்சிருக்கா?”
“குடும்பத்தெ நோய் நொடி வராமெ வெளெங்க வெக்கெறதுனாலெ அப்பிடிப் பேரு வெச்சிருக்கலாம். இல்லெ கார்த்திகெம்போது வெளக்கு ரொம்ப நாழி நின்னு எரியணும்கறத்துக்காக நல்லெண்ணெ கூட கொஞ்சம் இலுபெண்ணெயையும் வெளெக்கெண்ணையையும் சேத்துப்பாளே அதுனாலெ அப்படிப் பேரு வெச்சிருகலாம். ஒனக்கு ஏன் சுந்தான்னு பேரு வெச்சிருக்கா?”
“போ பாட்டி. நீ கில்லாடி! நெறெய விஷயம் தெரிஞ்சு வெச்சிண்டு இருக்கெ. தெரியாத விஷயம் ஒண்ணு இருந்தா இப்பிடி பதில் கேள்வி கேட்டே நழுவிடுவே.”
“அதுதாண்டா பேராண்டி அனுபவங்கறது.”
சுந்தாவும் சாருவும் வாசலுக்கு ஓடுகிறார்கள் விளையாட.
நானும் போறேங்க ஊட்டுக்கு. வேலெ நெறெய கெடக்குது. மெயிலு பாக்கோணும். பதிலு போடோணும்.
நடராஜன் கல்பட்டு
Designed and maintained by AKR Consultants


