- மழையும் நானும்
Courtesy: Natrajan Kalpattu Narasimhan
மழையில் நனைவ தென்றால் எனக்கு அன்றும், இன்றும், என்றுமே பிடிக்கும். முந்தையப் பிறவியின் தொடர் வாசனையாகக் கூட இருக்கலாமோ என்று எனக்கே சந்தேகம் எழும் சில சமயங்களில். (இவனைப் பாரு எருமை மாட்டு முதுகுலெ மழை பெய்ய்றா மாதிரி என்று சொல்லக் கேட்டிருப்பீர்கள் என நினைக்கிறேன்.) அது ஊண்மையோ இல்லையோ, பள்ளி நாட்களில் நான் மழையில் நனைவதின் சுகத்தினை அனுபவித்த்து தான் காரணமாக இருக்க வேண்டும் இன்றும் மழையில் நான் நனைய ஆசைப் படுவதற்கு.
நான் வசித்து வந்த சிற்றூரில் (பொன்மலையில்) இருந்து திருச்சிக்கு முதலில் ரயிலிலும் பின்னர் ஒன்பதாம் வகுப்பில் இருந்து சைக்கிளிலும் பள்ளிக்குச் சென்று வந்தேன்.
ஒரு முறை மாலையில் வீடு திரும்ப ஏறிடும் ரயில் எஞ்சின் பழுது பட்ட காரணத்தால் ரத்து செய்யப் பட்ட்து. அதனால் ரயில் பாதை வழியே நடந்து செல்ல ஆரம்பித்தேன். பாதி தூரம் நடந்திருப்பேன். வானத்தில் நீண்ட கோடு போன்றதொரு கரிய மேகம்.
என் மனத்துள் தோன்றியது. இன்னும் சில நிமிடங்களில் நல்ல மழை கொட்டப் போகிறது என்று. துரிதமாக நடக்க ஆரம்பித்தேன். ஐந்து நிமிஷம் கூட நடந்திருக்க மாட்டேன். கொட்ட ஆரம்பித்த்து கன மழை. அந்த மாதிரி மழையை இன்று வரை நான் மீண்டும் காண வில்லை. சொட்டச் சொட்ட நனைதபடி நடந்தேன் அடுத்த அரை மணி நேரம். அந்த இன்பமே தனி. (இப்படிப் பட்ட மழைக்கு cloud burst என்று ஆங்கிலத்தில் சொல்லுவார்கள்.)
நான் படித்த பள்ளியில் முதலில் வைக்கோலால் வேய்ந்த கூரை இருந்த்து. மழை பெய்யும் போது மழை நீர் கம்பி போல நீட்டிக் கொண்டிருக்கும் வைக்கோல்களில் இருந்து கீழே விழும். பார்த்திட அக் காட்சி அழகாக இருக்கும்.
அதே பள்ளியில் பத்தாவது படிக்கும் போது வைக்கோல் கூரை அஸ்பெஸ்டாஸ் கூரையாக மாறியது. அதனால் ஒர் அழகிய காட்சி மறைந்ததே யொழிய புதிய தொன்று தோன்றியது. நல்ல மழை பெய்யும் போது கூரையைத் தாக்கிடும் மழைத்துளிகள் “ஜோ” வென்று சத்தம் செய்யும். அந்த சத்தத்தில் ஆசிரியரால் பாடம் நட்த்த முடியாது. அந்த சத்தமும், பாடம் இல்லை என்ற நினைப்பும் மனதில் ஒரு புதிய உற்சாகத்தினை உண்டாக்கும்.
சென்ற நூற்றாண்டின் ஐம்பதுகளில் கான்பூரில் வேலை பார்த்து வந்தேன். அப்போது அங்குள்ளவர்கள் சொல்லுவார்கள், “கோடையில் பெய்திடும் முதல் மழையில் நனைந்தால் உஷ்ணத்தின் தாக்கம் உங்களுக்கு எப்போதுமே வராது” என்று. கரும்புத் தின்னக் கூலியா கொடுக்க வேண்டும்? அந்த வார்த்தைகள் போதாதா எனக்கு மழையில் நனைந்திட?
இப்படிப் பள்ளி நாட்களிலும் பின்னரும் மழையை அனுபவித்த்தாலோ என்னவோ இன்றும் மழை பெய்யும் போது எதாவது ஒரு சாக்கை வைத்துக் கொண்டு அதில் நனைவேன் நான்.
சந்தோஷமாய் நான் இருக்க என் மனைவியோ கவலைப் படுவாள் எனக்கு ஜலதோஷம் பிடிக்குமோ, ஜுரம் வந்திடுமோ என்று!
நீங்கள் எப்படி? மழையைக் கண்டு பயந்து ஒதுங்கும் ரகமா அல்லது அதில் நனைந்து மகிந்திடும் ரகமா?
நடராஜன் கல்பட்டு
எல்லோரும் இன்புற்று இருப்பதன்றி
வேறொன் றறியேன் பராபரமே
Designed and maintained by AKR Consultants
